
மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக
இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
கூறியுள்ளார்.
தவறான
செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை
நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக
உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். ஐ.ஏ.எஸ்
அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம்
விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும்
நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள்
சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில்
ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களைச் சந்தித்தார். நிர்மலா தேவி விவகாரம்,
காவிரி விவகாரம் என அடுத்தடுத்து தமிழகத்தில் பிரச்னைகள் சூடுபிடித்துள்ள
நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் செய்தியாளர்
சந்திப்பின்போது மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரையும்
ஆளுநருடன் இருந்தார்.
அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,
``மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவர். மாணவிகளிடம் பேராசிரியை அவ்வாறு பேசியது
கண்டனத்துக்குரியது. சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி
சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மாநில அரசு,
பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. ஒரு வாரத்தில் அவர் அறிக்கை
அளிப்பார். அறிக்கை அளித்த பின்னர், அதன்மீது என்ன நடவடிக்கை எடுப்பது
என்பது குறித்து முடிவு செய்யப்படும். என்னைக் கேட்காமல் 5 பேர் குழுவை
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்தது. நிர்மலா தேவி என்பவர் யார்
என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. இந்த
விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்த தேவையும் இல்லை. நிர்மலா
தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான
தண்டனை வழங்கப்படும். விசாரணைக்குழுவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த
விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண்
உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக்கொள்ளலாம். இந்த
விவகாரத்தில், கல்லூரி நிர்வாகம் ஒருமாத காலம் விசாரணை நடத்தாது குறித்தும்
சந்தானம் குழு விசாரணை நடத்தும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசிய ஆளுநர்....
துணைவேந்தர்களை
நியமிக்க மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க தேவையில்லை. தகுதியின்
அடிப்படையில், விதிகளின் பின்பற்றியே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக
சூரப்பா நியமிக்கப்பட்டார். தேடுதல் குழு 3 பேரை பரிந்துரைத்தது.
அவர்களிடம் நான் நேர்காணல் நடத்தினேன். அதில் பொறியியல் பின்னணி கொண்டவர்
சூரப்பா. அதனாலேயே அவர் நியமிக்கப்பட்டார். இதில், மாநில அடிப்படையில்
பாகுபாடு காட்டப்படவில்லை. கல்வித்துறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது.
மேலும் பல்கலைக்கழகத்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருகிறேன்.
காவிரி விவகாரம் குறித்து பேசிய ஆளுநர்...
அக்டோபர்
மாதம் நடந்த ஆளுநர் கூட்டத்திலேயே காவிரி விவகாரம் குறித்து
வலியுறுத்தினேன். விவசாயிகள் பயன்பெற மேலாண்மை வாரியம் அமைப்பதே சரி என
அக்கூட்டத்தில் பேசினேன். டெல்லி செல்லும் போதெல்லாம் காவிரி குறித்து பேசி
வருகிறேன். மேலாண்மை வாரியம் குறித்து இன்று கட்காரியிடம் பேசினேன்.
மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. இதில் தமிழக
விவசாயிகளுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படும். பிரதமரை சந்திக்க கோரிய
தி.மு.க-வின் கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டவன்...
நான்
மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது
அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான்
உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது
பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை
வெளிப்படையானதே. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நிர்மலா தேவி
விவகாரத்தில் என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை.
78 வயதாகும் எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான். என்னைப்பற்றி தவறாக பேச
வேண்டாம்.
No comments:
Post a Comment