
காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக
அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு
மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத்
தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும்
விளக்கம் கேட்டுள்ளது.
காவிரி
மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம்
அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு
தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்
போராட்டம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோ பதிவு சனிக்கிழமை
மாலை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
தொடர்
விடுமுறை நாட்கள் உள்ள காரணத்தால் மெரினா கடற்கரையில் பொதுமக்களின்
கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு விரைந்த காவல்துறை விசாரணை நடத்தி
வருகின்றனர். இதையடுத்து அங்கு அதிகளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டு
பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த
புகைப்படத்தில் உள்ளவர்கள் தனிநபர்களா? அல்லது ஏதேனும் ஒரு குழு அல்லது
அமைப்பைச் சேர்ந்தவர்களா? என்பது போன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக
நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் விளைவாக மெரினா கடற்கரையில்
போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment