
பா கிஸ்தானிலிருந்து
செயல்படும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரின் அமைப்பு உள்பட 27 தீவிரவாத
அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின்
வர்த்தகத் தலைநகரான மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி
சுமார் 10 பயங்கரவாதிகள், ஆயுதங்களுடன் நுழைந்து அங்குள்ள ஐந்து நட்சத்திர
விடுதியான தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம் உள்ளிட்ட
இடங்களில் தீடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல்களில்
அப்பாவி மக்கள், காவல்துறை அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் என மொத்தம் 164
பேர் பலியானார்கள்.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பாவி மக்களின் உயிரைப்
பறித்த இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவரான
ஹபீஸ் சயீத்தே மூளையாகச் செயல்பட்டார் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தேடப்படும் முக்கியத் தீவிரவாதி பட்டியலில் ஹபீஸ் சயீத்
சேர்க்கப்பட்டார். மேலும், இதுபோன்ற தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து,
அவர்களின் அமைப்பு தங்கள் மண்ணிலிருந்து செயல்பட வழிவகுத்துள்ள
பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சுவார்த்தை கிடையாது என்று இந்திய அரசு
திட்டவட்டமாக அறிவித்தது.
ஹபீஸ் சயீத்துக்கு எதிரான ஆதாரங்கள்
மற்றும் மும்பை தாக்குதலின் பின்னணி உள்ளிட்டவை அடங்கிய ஆவணங்களை மத்திய
வெளியுறவுத்துறை சார்பில், பாகிஸ்தான் அரசிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்டது.
எனினும், தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில், பாகிஸ்தான் அரசு
தயக்கம் காட்டி வந்தது.
இந்தியா அளித்த புகாரின்பேரில், ஹபீஸ்
சயீத்தை பாகிஸ்தான், வீட்டுச்சிறையில் அடைத்தது. ஆனால், ஓரிரு தினங்களில்
அவரை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இருப்பினும் ஹபீஸ் சயீத்தை விடுவிக்கக்
கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. மேலும் அவரின்
தலைக்கு பல கோடி ரூபாய் பரிசு வழங்குவதாகவும் அறிவித்தது. இதேபோல் ஐ.நா.
சபையும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்து
நடவடிக்கை எடுத்தது.
என்றாலும், தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான்
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்க
அதிபர் டொனால்டு ட்ரம்ப், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படும்
பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது.
இந்த
நிலையில்தான், ஹபீஸ் சயீத்தை தற்போது தீவிரவாதி எனப் பாகிஸ்தான்
அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்குப் பணிந்து பாகிஸ்தான் இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இயற்றியுள்ள அவசரச் சட்டம் ஒன்றின்
மூலம் ஐ.நா.சபை தடை செய்துள்ள 27 அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்பு என்று
கூறி, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் -உத்-தவா உள்ளிட்ட 27 அமைப்புகளுக்கு
பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான்
அதிபர் மம்னூன் உசேன் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தச் சட்டம் தீவிரமாக
நடைமுறைப்படுத்தப்பட்டால், ஹபீஸ் சயீத்தின் ஜமாத்- உத்-தவா,
லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இயங்கத் தடை
உருவாகும். அந்த அமைப்புகளின் அலுவலகம், வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.
பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் தடை
விதித்திருப்பதை அந்நாட்டு அரசுத் தகவல்கள் உறுதிசெய்துள்ளன.
யார் இந்த ஹபீஸ் சயீத்?
1947-ல்
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஹபீஸ் சயீத்தின் குடும்பம்,
ஹரியானா மாநிலம் ஹிசார் கிராமத்திலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம்
சர்கோதா என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தது. பாகிஸ்தான் பிரிந்தபோது ஏற்பட்ட
இந்து-முஸ்லிம் வன்முறையில், தன் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர்
உயிரிழந்ததாக சயீத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மத கொள்கைகளுக்கான
கவுன்சிலில் தன்னை நியமித்த ஜெனரல் ஜியா-உல்-ஹக்-ஐ சந்தித்த ஹபீஸ் சயீத்,
பின்னர் பாகிஸ்தானின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்
இஸ்லாமியப் படிப்பு தொடர்பான பேராசிரியராகப் பணியாற்றினார்.
1980-ம்
ஆண்டு தொடக்கத்தில் மேல் படிப்புக்காக சவுதி அரேபியாவில் உள்ள
பல்கலைக்கழகம் ஒன்றில் ஹபீஸ் பதிவு செய்துகொண்டு, அங்கு சென்றார். அப்போது
சோவியத் - ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற ஷேக்குகளை சயீத் சந்தித்துப் பேச
வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் செயல்படும் முஜாஹிதீன்
அமைப்புக்கு ஆதரவு அளிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஹபீஸ்
சயீத்தும், அப்துல்லா அஸமும் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்
முன்னோடியான மார்கஸ் தவா-வல்-இர்ஷாத் என்ற அமைப்பை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.
அதிகாரிகள் உதவியுடன் ஏற்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில்
உள்ள இளைஞர்களைக் குறிப்பாக பதின்ம வயதினரைக் குறிவைக்கும் ஹபீஸ் சயீத்,
அவர்களிடம் மதத்தைக் காரணம் காட்டி, அரசையும், ஆயுதப்படையினரையும்
எதிர்த்துப் போராட மூளைச் சலவை செய்வார். அப்படி உருவானதே லஷ்கர்-இ-தொய்பா
தீவிரவாத இயக்கம். இதன் கிளை அமைப்புதான் ஜமாத்-உத்-தவா.
சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா அமைப்புகள் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன.
மும்பையில்
நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ்
சயீத்தின் தலைக்கு 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று 2012-ம் ஆண்டில்
அமெரிக்கா அறிவித்தது.
பாகிஸ்தானில் 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள
பாதிப்புகளுக்கு இந்தியாவே காரணம் என்று ஹபீஸ் சயீத் ட்விட்டரில்
குற்றம்சாட்டியிருந்தார். பாகிஸ்தான் எல்லைக்குள் ஓடும் ஆற்றில் இந்தியா
முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்துவிடுவதாகவும், வேண்டுமென்றே இந்தச்
செயலில் ஈடுபடுவதாகவும், இதனை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கவனத்திற்குக்
கொண்டு செல்ல வேண்டும் என்றும் சயீத் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான்
2018-ம் ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின்
அறிவுறுத்தல்படி, தடை செய்யப்பட்ட லஷ்கர் அமைப்பின் கிளை அமைப்பான
ஜமாத்-உத்-தவா பெற்ற நன்கொடைக்கு பாகிஸ்தானின் பங்குப் பரிவர்த்தனை வாரியம்
தடை விதித்தது.
தற்போது, அவசரச் சட்டம் இயற்றி, ஐ.நா.-வால் தடை
செய்யப்பட்டுள்ள லஷ்கர் உள்ளிட்ட 27 அமைப்புகளையும் தடை செய்வதுடன், ஹபீஸ்
சயீத்தையும் தீவிரவாதியாக அறிவித்து, அவருக்கு பாகிஸ்தான் அரசு தடை
விதித்துள்ளது.
No comments:
Post a Comment