திருத்தணி பகுதியில் ரவுடி பினுவை தேடிச் சென்றபோது அ.தி.மு.க.
கவுன்சிலர் வழக்கில் தேடப்பட்டு வந்த பழைய சாராய வியாபாரி சிக்கியுள்ளார்.
சென்னையில்
சமீபத்தில் ஒரே இடத்தில் 76 ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
ரவுடி பினு பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய ரவுடிகளை போலீஸார்
சுற்றிவளைத்துக் கைது செய்தனர். இருப்பினும் ரவுடி பினு உள்ளிட்ட சிலர்
தப்பித்து விட்டனர். இவர்களைத் தேடும் பணியைத் தமிழகக் காவல்துறை
முடுக்கிவிட்டுள்ளது. சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம்
முழுவதும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், ரவுடி பினுவைத்
தேடிச் செல்லும்போது, அ.தி.மு.க.
கவுன்சிலர் வழக்கில் தேடப்பட்டு வந்த பழைய சாராய வியாபாரி சிக்கியுள்ளார்.
திருத்தணியைச்
சேர்ந்தவர் கிரண்குமார் (வயது 33). இவர் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம்
மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களைச் செய்து வந்தார். இவருக்கும் அதே
பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஆப்பிள் ஆறுமுகத்திற்கும்
கள்ளச்சாராயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது. இதனால்
கடந்த வருடம் மார்ச் மாதம் ஆப்பிள் ஆறுமுகம் வாக்கிங் செல்லும்போது
கூலிப்படையை ஏவி கிரண்குமார் கொலை செய்துவிட்டார். இது சம்பந்தமாகத்
திருத்தணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதனால்
தலைமறைவாகிய கிரண்குமார் மறைந்து இருந்து தொழில்களைக் கவனித்து வந்தார்.
இவர் பெயில் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே,
ரவுடி பினுவைத் தேடி இன்ஸ்பெக்டர் ஷாகுல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட
தனிப்படை போலீஸார் இன்று திருத்தணிப் பகுதியில் தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்தப் பகுதியில் சோதனை
நடத்தும்போது தலைமறைவாக இருந்த கிரண்குமார் சிக்கினார். திருத்தணி ரயில்
நிலையத்திற்கு அருகே உள்ள அவரது வீட்டின் அருகே போலீஸ் சுற்றிவளைத்துக்
கிரண்குமாரைக் கைது செய்தது. பின்னர் சோதனை நடத்தும்போது அவரது வீட்டில் 17
பட்டாக்கத்திகள் இருந்தது, போலீஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்
தொடர்ந்து கிரண்குமாரையும், அவனது கூட்டாளி வடிவேலையும் கைது செய்த
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment