
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட
தெருவோரச் சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக புழுதி
பறக்கும் சாலைகளாக இருப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதனால் தங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை என்று கூறி ஈரோடு வணிகர்கள்
முகத்தில் மாஸ்க் கட்டி கொண்டு நூதன முறையில் மாநகராட்சியை முற்றுகையிட்டு
ஆர்ப்பாட்டத்தில் இன்று (23.1.2018) ஈடுபட்டனர். இதில், 100-க்கும்
மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டார்கள்.
இதுகுறித்து, ஈரோடு மொபைல்
அண்ட் ரீசார்ஜ் சங்கத்தின் துணைத் தலைவர் காஜா மைதீன், ''ஈரோடு மாநகராட்சி
செயல்படாத மாநகராட்சியாக இருந்து வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்தின் எதிரே உள்ள அண்ணாச்சி
வீதி, முத்துரங்கன் வீதி, பிரகாசம் வீதி, சிவசண்முகம் வீதி போன்ற
பகுதிகளில் உள்ள சாலைகள் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலைகளாக
போடப்பட்டது. தார்ச் சாலைகள் அரிக்கப்பட்டு மண் ரோடுகளாக குண்டும்,
குழியுமாகத் தற்போது பரமாரிப்பின்றி இருக்கிறது.
இந்தச் சாலைகளில்
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர
வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி பறப்பதால்
உணவகங்கள், வணிக நிறுவனங்களில் தூசு படிகிறது. அதேபோல், வீடுகளில் உள்ள
குடிநீர் வரை அந்தத் தூசுகள் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
காற்று மாசுபடு அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிட முடியாமல்
திணறுகிறார்கள். மண் புழுதி கடை முழுவதும் பரவி இருப்பதாலும்
இப்பகுதிக்குள் வந்தால் உடல் முழுவதும் மண் படிந்து விடுவதால், இங்கு
இருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்குப் பொருள்களை வாங்க வருவதற்கு
நுகர்வோர்கள் தயங்குகிறார்கள். நாங்களும் 6 மாங்களுக்கு முன்பு ஈரோடு
மாநகராட்சி கமிஷனரை சந்தித்து இதுகுறித்து எடுத்துக் கூறியும், இதுநாள் வரை
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு
இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டோம்'' என்றார்.
No comments:
Post a Comment