ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ளது,
அரசவெளி கிராமம். குளிர்ச்சியான மலைப் பகுதிதான். ஆனால், அந்த மதிய
வேளையில் வெயில் வெளுத்திக்கொண்டிருந்தது. சாலையோரம் இருந்த சிறிய பெட்டிக்
கடையைத் தவிர வேறு கடைகள் இல்லை. பொதுமக்கள் நடமாட்டமும் குறைவு. அந்தச்
சமயத்தில்தான் அந்தக் காட்சி... தூரத்திலிருந்த வயல்வெளி வரப்பில் பள்ளிச்
சீருடையில் புத்தகப் பையைச் சுமந்தபடியே மாணவ, மாணவிகள். அவர்களுடன்
பெரியவர்களும் வருவதைப் பார்த்து திகைப்பு.
"என்ன தம்பிங்களா
பார்க்க வெளியூரு மாதிரி இருக்கே. இந்த வெயிலுல இங்கே சுத்தறீங்களே, சுத்தி
முத்தி காடுப்பா. அங்கே இங்கே போயிடாம வந்த வழியே திரும்புங்க" என்கிறார்
ஒரு பெண்.
"சரிங்கம்மா, நான் காட்டுக்குள்ளே போகலை. நீங்க இந்த நேரத்துல
ஸ்கூல் பிள்ளைகளோடு எங்கே போயிட்டிருக்கீங்க. காலையிலதானே ஸ்கூலுக்குப்
போவாங்க" எனக் கேட்டோம்.
"நாங்க காத்தால 7 மணிக்கே வீட்டிலிருந்து
கௌம்பிட்டோம். பக்கத்துலயா இருக்குது வெரட்டுன்னு வர்றதுக்கு. பிள்ளைகள்
எல்லாத்தையும் தெரட்டிக்கிட்டு வர வேணாமா? எம்புட்டு தொலைவு நடந்து வரணும்.
அதான் நேரமாகிடுச்சு" என்கிறார் பெருமூச்சுடன்.
அவர்களில்
மஞ்சுளா என்பவர், "எங்களுக்குப் புளியமரத்தூர்ல வீடு இருக்குதுங்க சாமி.
அந்தா முன்னாடி போதுங்களே அவங்க பலம்பட்டு கிராமத்து ஆளுங்க. பின்னாடி
தூரத்துல வாரது குடிக்கணுர் ஆளுங்க. எங்க புள்ளைங்க எல்லாரும் பொங்கல்
லீவுக்கு வீட்டுக்கு வந்துச்சுங்க. நாலு நாளு லீவு முடிஞ்சு திரும்ப
ஸ்கூல்ல கொண்டுபோயி விடுறதுக்காக போயிட்டிருக்கோம். இந்த இவதான் என் மூத்த
பொண்ணு ஐசு. அவன் ராஜேஷ். ரெண்டு பேரும் அஞ்சாவது படிக்கிறாங்க. இவ இந்து
ரெண்டாவது படிக்கிறா.
எங்க ஊருக்கு பஸ்ஸோ, ஆட்டோவோ கிடையாது தம்பி.
மூணு மலைகளைக் கடந்து, ரெண்டு கால்வாய்களைத் தாண்டித்தான் பசங்களை
ஸ்கூலுக்கு இழுத்துட்டு வரவேண்டியிருக்கு. இது இன்னைக்கு நேத்தைக்கு
இல்லப்பா. ரொம்ப வருஷமாவே இப்புடித்தான் வந்துபோயிட்டுருக்கோம். காத்தால
வீட்டுல நாலு வரக காச்சிக் குடிச்சிட்டு, வெயிலுக்கு முன்னாடி
கௌம்பிடுவோம். வழியில பசியெடுத்தா ரெண்டு கெழங்க திண்ணுட்டே நடந்துடு இந்த
நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருத்தரா ஸ்கூலுக்கு வந்துடுவோம். பள்ளிக்கூடத்துல
எங்களுக்கும் சேர்த்து சோறு ஆக்கி வெச்சிருப்பாங்க. புள்ளைங்களோடு சேர்ந்து
சாப்புட்டுட்டு பசங்களை விட்டுட்டு மூணு மணிக்கு கெளம்புனா, ராவுல வீடு
போய்ச்சேர்ந்துடுவோம்" என வெகுளியாகப் பேசிவிட்டு, தன் மூன்று
பிள்ளைகளைகளுடன் நடையில் வேகம் கூட்டுகிறார்.
"முன்னாடி
எல்லாம் எங்க சனங்க தேனெடுக்கப் போறதும், வேட்டையாடப் போறதுமா இருந்தாங்க.
இப்போ பசங்க படிச்சாத்தானைய்யா வெளியில மதிப்பு கிடைக்குது. நல்லா
பாருங்க, காட்டுக்குள்ளே வாழுற எங்களுக்கு ரோடுகூட இந்த அரசாங்கம் போட்டுக்
கொடுக்கலே. எங்க ஊருலயே ஸ்கூல் இருக்கு. ஆனா, வாத்தியாருங்க சரியா
வர்றதில்லே. அதனால, புள்ளைங்களும் காடு, மேடுனு சுத்த ஆரம்பிச்சுடுதுங்க.
அதனாலதான் அஞ்சு மணி நேரம் நடந்துவந்து, இந்த அரசவெளி பள்ளிக்கூடத்துல
விட்டுட்டுப் போறோம். வாரம் ஒருமுறை வந்து பாத்துட்டுப் போவோம். ரெண்டு
மூணு நாளு சேர்ந்தாபோல லீவு வந்துச்சுன்னா வீட்டுக்குக் கூட்டிட்டுப்
போயிடுவோம். வாரா வாரம் ஊருக்கும் ஸ்கூலுக்கும் அலைஞ்சு எங்களில்
பலருக்கும் மூட்டுவலியே வந்துடுது. புள்ளைங்களும் வெயில்ல வாடுறதைப்
பார்க்க வருத்தமா இருக்கு. ஆனாலும், அதுங்க நல்லா படிச்சு
வெளியுலகத்துக்குப் போகும்போது இந்தக் கஷ்டம்லாம் பறந்து போயிடும் தம்பி" -
பெயர் சொல்லவே கூச்சப்பட்ட ஓர் அம்மாவின் முகத்தில், களைப்பைத் தாண்டி,
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை வரிகள்.
பேசிக்கொண்டே
அரசவெளி பள்ளிக்கூடத்துக்குள் நுழைகிறார்கள். அனைவரும் தங்கள் பிள்ளைகளோடு
சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்கள். மதியம் மூன்று மணி
ஆனது. பிள்ளைகள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிப்பதை வாசலில் நின்று
கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக கிளம்புகிறார்கள். அந்த
இடம் முழுக்க அமைதியும் ஒரு தலைமுறையின் நம்பிக்கையும் சூழ்ந்திருந்தது.

No comments:
Post a Comment