முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம்
குறித்த அவதூறு வார்த்தைகளை, துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான
எஸ்.குருமூர்த்தி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர் மீது
அவதூறு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார்
கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக,
தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இது, ஆறு மாதங்களுக்கு
பிறகு காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என கடுமையாக விமர்சித்து, துக்ளக்
ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்வீட்டர்
பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒபிஎஸ் குறித்தும்
கடும் விமர்சனங்களை வைத்திருந்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''அதிமுகவைப்
பற்றி மிக தரம் தாழ்ந்த நிலையில் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். இது,
மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை
ஏற்றுக் கொள்ள முடியாது. விஷமத்தனமானது. இதை யார் பேசினாலும் அதை
அனுமதிக்க முடியாது. அவருக்குப் பின்னால் பாஜக மட்டுமின்றி யார்
இருந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர்
மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எங்களை தன்மானத்துடன்தான்
வளர்த்தெடுத்துள்ளனர். எங்களை பற்றி நாலந்தரமாக விமர்சிப்பவர்களை ஒரு
கைபார்ப்போம். அதிமுக தொண்டர்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
நாவடக்கத்துடன்
அவர் பேச வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர்
பன்னீர்செல்வத்தை மட்டுமின்றி அதிமுக தொண்டர்களைக் கூட அவதூறாக
விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் கூறிய வார்த்தைகளை அவர்
திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வது
குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்'' என அமைச்சர் ஜெயக்குமார்
கூறியுள்ளார்.

No comments:
Post a Comment