மத்திய அரசு முத்தலாக் மசோதாவை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் கொண்டுவர
திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மசோதாவிற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர்
சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் மூன்று
முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச
நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை
முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது.
இதையடுத்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அதற்கான சட்ட முன்வடிவு
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட முன்வடிவில் ‘‘சட்டத்துக்கு
புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும்
ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். இதை அவர்கள்
வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்த வகையிலும்
அளிக்க முடியாது. இதை மீறி, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்கள் மீது
அளித்து அவர்கள் கைது செய்யப்பட்டால் ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன்,
விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின்
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதி
செய்யப்பட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின்
முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. இதுபோலவே, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் மத்திய அரசின்
முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவர் மவுலானா ரபே ஹசானி நட்வி கூறியதாவது:
‘‘மத்திய
அரசு கொண்டு வர முயலும் முத்தலாக் சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
பெண்கள் மற்றும் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. கணவனிடம் இருந்து
விவாகரத்து பெற விரும்பும் பெண்களுக்கு இது, இடையூறாக அமையும். எனவே இந்த
மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கக்கூடாது. இதுபற்றி முதலில்,
முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்துடன் ஆலோசனை நடத்த வேண்டும்’’ எனக்கூறினார்.
இதுபோலவே
முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கலீலூர் ரகுமான்
சஜாத் நேமானி கூறுகையில் ‘‘முத்தலாக் சட்டம் குறித்து முஸ்லிம் தனிநபர்
சட்ட வாரியத்துடன் மத்திய அரசு விவாதிக்கவில்லை. சட்டப்படி இது தவறு.
முத்தலாக் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆனால் முத்தலாக் கூறுபவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க
முயலுகிறது’’ எனக்கூறினார்.
இதுபோலவே முஸ்லிம் தனிநபர் சட்ட
வாரியத்தின் பெண் உறுப்பினர் அஸ்மா ஸிகரா கூறுகையில் ‘‘முத்தலாக் சட்டம்,
முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. முத்தலாக் சொல்லும் கணவனை சிறையில்
அடைத்தால், முஸ்லிம் பெண் மற்றும் அவரது குழந்தைகளின் எதிர்காலம்
என்னாகும்’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment