Latest News

முடிந்தது குஜராத் தேர்தல்: காங்கிரஸூக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில், காங்கிரஸ் 77 தொகுதிகளை கைபற்றி வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் இமாச்சல பிரதேச தேர்தலில், பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. 

இதன் மூலம்,  'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற தங்கள் இலக்கு நிறைவேறி வருவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், "பாஜகவின் முயற்சி வெற்றிபெறவில்லை, குஜராத்தின் வெற்றியின் மூலம் உண்மையிலேயே காங்கிரஸ் தனது பயணத்தில் முன்னேறி இருக்கிறது" என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியிருக்கிறார்.

எனினும் 2018ம் ஆண்டு காங்கிரஸூக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸை பொறுத்தவரையில் தற்போது, கர்நாடகா, பஞ்சாப், மிசோரம், மேகாலயா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சியில் உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியிலும் ஆட்சி நடத்தி வருகிறது. இதில், கர்நாடகா, பஞ்சாபை தவிர மற்ற அனைத்துமே சிறிய மாநிலங்கள்.

வரும் 2018ம் ஆண்டில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகா மிக முக்கியமானது. தென் மாநிலங்களில் பாஜக வலுவாக உள்ள ஒரே மாநிலம். இங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ், தேர்தலில் மீண்டும் வெல்ல, பாஜகவின் கடும் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கர்நாடகாவில் வலிமையான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

அங்கு தேர்தல் பணிகளையும், பாஜக ஏற்கனவே தொடங்கியுள்ளது. முதல்வர் சித்தராமையா போன்ற வலுவான உள்ளூர் தலைவர் காங்கிரஸில் உள்ளபோதிலும், அக்கட்சி தேர்தலில் கடும் சவாலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோலவே முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் தனித்து போட்டியிடக்கூடும் என்பதால் இம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

இதை தவிர பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக வலுவாக உள்ள இந்த மாநிலங்களில், அக்கட்சிக்கு கடும் போட்டியை கொடுத்தால் மட்டுமே அங்கு காங்கிரஸ் ஆட்சியை கைபற்ற முடியும்.

மத்திய பிரதேசத்தில், ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத், திக்விஜய் சிங் போன்றவர்களும், ராஜஸ்தானில் சச்சின் பைலட், அசோக் கெலாட் போன்ற வலுவான தலைவர்கள் இருப்பது காங்கிரஸூக்கு கூடுதல் பலம். சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரையில் அஜித் ஜோகிக்கு பிறகு காங்கிரஸில் வலுவான தலைவர்கள் உருவாகவில்லை.

இதைத்தவிர, மிசோரம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் சிறியவைதான் ஆனால் வடகிழக்கில் காங்கிரஸ் நீண்டகாலமாகவே வலுவாக இருப்பதால் அங்கு தனது பலத்தை தக்கவைக்க வேண்டிய அவசியமும் அக்கட்சிக்கு உள்ளது.

இந்த மாநிலங்களில் பெறும் வெற்றி காங்கிரஸூக்கும் சரி, பாஜகவுக்கும் சரி, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊக்கமாக அமையும். அதுமட்டுமின்றி மாநிலங்களவை தேர்தலில் தங்கள் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இந்த தேர்தல்கள் மிக முக்கியம். நான்கு மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், கூடுதல் வெற்றியை ஈட்ட கடும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரது தலைமையில் காங்கிரஸூக்கு புதிய சவால் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.