Latest News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை: வைரஸ் காய்ச்சல் அவதியால் நேரில் ஆஜராக அவகாசம் கேட்ட விஷால்

ராதாரவியை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கிய விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பை சந்தித்த விஷாலை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வைரஸ் காய்ச்சலால் ஆஜராவதில் விஷால் தரப்பு அவகாசம் கேட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் டிச.22-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றிபெற்று, தலைவராக நடிகர் நாசர், செயலாளராக நடிகர் விஷால் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். பின்னர், அவர்களுக்கு முன்னதாக சங்கத்தை நிர்வகித்த தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் முடிவெடுக்கப்படும் வரை ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என செப்டம்பர் 22-ம் தேதி சங்க செயலாளர் என்ற முறையில் விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மதிக்காமல் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் ராதாரவியை நீக்கினர். இதை தொடர்ந்து நடிகர் சங்கம் மற்றும் செயலாளர் விஷாலுக்கு எதிராக ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சங்கம் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்து விட்டு ராராதவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மூலம் நீதிமன்ற அவமதிப்பு தெளிவாகியுள்ளது. அதனால் டிசம்பர் 19-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதால் நான்கு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர் தெரிவித்துள்ளதாகவும், அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி சுந்தரேஷ் வழக்கை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.