Latest News

கால்நடை தீவன வழக்கில் லாலு குற்றவாளி: ரூ.1,000 கோடி ஊழல் விவகாரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு - ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று லாலு பிரசாத்தை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரை போலீஸார் ராஞ்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.   -  - 

கால்நடை தீவன ஊழல் விவகாரத்தின் 2-வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் அவருக்கான தண்டனை விவரம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. லாலு மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 1990-ம் ஆண்டு பிஹார் முதல்வராக லாலு பிரசாத் இருந்த போது கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் திட்டத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க 1996-ல் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 1997-ல் முதல்வர் பதவியிலிருந்து லாலு விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

சிபிஐ விசாரணையில், லாலு பிரசாத்துக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் கால்நடைத் தீவன ஊழல் நடைபெற்றது தெரியவந்தது. 

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. 

பிஹாரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தனியாக பிரிந்ததை தொடர்ந்து அந்த மாநிலம் தொடர்பான வழக்குகளை ராஞ்சிக்கு மாற்ற 2001 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் 53 வழக்குகளின் விசாரணை, ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 

5 ஆண்டு சிறை


இதில் சாய்பாஸா மாவட்டக் கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி மோசடி செய்த வழக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என்று கடந்த 2013 அக்டோபரில் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிஹார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து லாலு பிரசாத்தின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 87 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. 

உச்ச நீதிமன்ற உத்தரவு


இதனிடையே லாலு பிரசாத் சார்பில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்ற நடைமுறைச் சட்டத்தின்படி ஒரே குற்றத்துக்காக இருமுறை ஒருவர் மீது குற்றம் சாட்ட முடியாது என்று லாலு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், கால்நடைத் தீவன ஊழலில் லாலு மீதான 4 வழக்குகளை தள்ளுபடி செய்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை கடந்த 2014 நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் கால்நடைத் தீவன வழக்குகள் தொடர்பான விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது.

தியோகர் கருவூல வழக்கில் தீர்ப்பு


இதைத் தொடர்ந்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன வழக்குகள் வேகம் பெற்றன. இதில் தியோகர் கருவூலத்தில் இருந்து கடந்த 1991 முதல் 1994-ம் ஆண்டு வரை ரூ.89 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உட்பட 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

விரைவில் மேல்முறையீடு


இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டார். வரும் ஜனவரி 3-ம் தேதி லாலு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் ரகுவன்ச பிரசாத் கூறியதாவது:

தியோகர் கருவூல வழக்கில் சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். சட்டரீதியான எங்களது போராட்டம் தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மன்றத்தில் முறையிடுவோம். லாலு பிரசாத்துக்கு எதிரான சதியை அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 3-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பிறகு மேல்முறையீடு செய்யப்படும் என லாலுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

லாலு பிரசாத் கருத்து


தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனினும் உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் சிலர் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இனவாத, சாதிய சிந்தனை கொண்டவர்கள் இன்றளவும் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், அம்பேத்கர் ஆகியோரை வில்லன்களாகவே பார்க் கின்றனர். இவ்வாறு லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவன ஊழலில் லாலு பிரசாத் மீதான 5 வழக்குகளில் இதுவரை 2 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.97 கோடி தும்கா கருவூல மோசடி, ரூ.36 கோடி சாய்பாஸா கருவூல மோசடி, ரூ.184 கோடி டோரந்தா கரூவூல மோசடி என அவருக்கு எதிரான மேலும் 3 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பாஜக கருத்து


பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியபோது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் கால்நடைத் தீவன வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது 2-வது வழக்கிலும் அவர் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் மீது புகார் கூறுவது எந்த வகையில் நியாயம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறும்போது, மத்திய அரசின் கூண்டுக்கிளியாக சிபிஐ செயல்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.