இக்பால் அன்சாரி
பாபர் மசூதி விவகாரத்தில் தலையிட ஷியா வக்பு வாரியத்துக்கு உரிமை இல்லை
என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. லக்னோவில்
மசூதியும், அயோத்தியில் கோயிலும் கட்டலாம் என ஷியா வக்பு வாரியம் கூறியதை
தொடர்ந்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜபர்யாப் ஜீலானி
உ.பி. ஷியா மத்திய
வக்பு வாரியத்தின் தலைவராக இருப்பவர் வசீம் ரிஜ்வி. ராமர் கோயில் - பாபர்
மசூதி பிரச்சினையில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
மேற்கொண்டுள்ள சமரச முயற்சிக்கு வசீம் ரிஜ்வி முழு ஆதரவளித்து வருகிறார்.
லக்னோவில் நேற்று முன்தினம் பேசிய ரிஜ்வி, அயோத்தியில் ராமர் கோயிலும்,
லக்னோவில் பாபர் மசூதியும் கட்ட முஸ்லிம்கள் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இது குறித்த சமரச உடன்படிக்கையை உச்ச நீதிமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளதாகவும் ரிஜ்வி கூறினார். இதற்கு முஸ்லிம்களில் ஷியா, சன்னி
ஆகிய இரு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வசீம் ரிஜ்வி
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட
வாரியத்தின் மூத்த உறுப்பினரும் பாபர் மசூதி தரப்பினரின் வழக்கறிஞருமான
ஜபர்யாப் ஜீலானி கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் பாபர் மசூதி வழக்கில்
ஷியா வக்பு வாரியத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லாதபோது அவர்கள் எப்படி
சமரச உடன்படிக்கையை தாக்கல் செய்ய முடியும்? பாபர் மசூதி தமது வக்பிற்கு
சொந்தமானது என நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கு 1946-ல் தள்ளுபடி
செய்யப்பட்டது. அதன்பிறகு 2010-ல் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு அலகாபாத்
உயர் நீதிமன்றத்தில் வெளியானது வரை ஷியா வக்பு வாரியம் அமைதி காத்தது.
இப்போது திடீர் என பலவந்தமாக தலையிடுவதை எவரும் ஏற்கவில்லை. பாபர் மசூதியை
ரிஜ்வி தனது குடும்பச் சொத்தாகக் கருதி அதை சமர்ப்பிக்க விரும்புகிறார்.
தாஜ்மகால் மீது நாங்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியாதோ அதுபோல ரிஜ்வியும்
பாபர் மசூதியில் சொந்தம் கொண்டாட முடியாது” என்றார்.
அகில இந்திய
ஷியா முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், ஷியா வக்பு வாரிய யோசனையை
கண்டித்துள்ளது. இதன் செய்தித் தொடர்பாளர் மவுலானா யாகூப் அப்பாஸ்
கூறும்போது, வசீம் ரிஜ்வி கூறுவது அவரது சொந்தக் கருத்து. அகில இந்திய
முஸ்லிம் (சன்னி) தனிச்சட்ட வாரியத்தின் நிலைப்பாட்டை ஷியா தனிச்சட்ட
வாரியம் தொடர்ந்து ஆதரிக்கிறது” என்றார்.
இதுகுறித்து பாபர் மசூதி
முத்தவல்லியின் மகனும் வழக்கின் முக்கிய மனுதாரருமான இக்பால் அன்சாரி, ‘தி
இந்து’விடம் கூறும்போது, “சமரசம் என்ற பெயரில் ஷியா மற்றும் சன்னிகள் இடையே
மோதல் உருவாக்க ரிஜ்வி முயற்சிக்கிறார். அவரது முயற்சி பலிக்காது.
அவருக்கு ஆதரவளிக்க பத்து முஸ்லிம்கள் கூட இல்லை. வாரியத் தலைவராக பல
ஊழலில் சிக்கிய அவர், அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இந்து
தரப்பினருக்கு ஆதரவாக பேசி வருகிறார். அயோத்தி பாபர் மசூதியை லக்னோவில்
போய் கட்ட முடியுமா? ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி எந்த உடன்படிக்கையும்
முன்வைக்காததால், நான் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் முடிவை முழுமனதுடன்
ஏற்பேன்” என்றார்.
No comments:
Post a Comment