Latest News

  

கேரளப் பெண் ஹாதியா வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஷபின் ஜகானுடன் ஹாதியா
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய காதல் திருமண வழக்கில் தொடர்புடைய பெண்ணை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலாவுக்கும் (24) ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காகவே அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். ஆனால் ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

கேரளாவில் முஸ்லிம் இளைஞர்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத அமைப்புக்கு பயன்படுத்துவதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன. இந்நிலையில் அசோகனின் இந்தக் குற்றச்சாட்டும் முக்கியத்துவம் பெற்றது.

இதனிடையே, தனது மகளை மீட்டு தரக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணத்தை கடந்த மே 24-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உத்தரவிட்டது.

ஹதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், அக்.30 அன்று ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஹாதியாவின் தந்தை முன்னதாகவே அவரை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ''திறந்தவெளியில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றால், விசாரணையே பலனளிக்காமல் போய்விடும்.

இனவாத பதற்றம் நிலவும் இந்த வழக்கில் கேமரா முன்பு விசாரணை நடைபெற வேண்டும். இல்லையெனில் அவற்றின் தீவிரக் கூறுகள் என் மகள் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பையும் அந்தரங்கத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கும்'' என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்னர் கூறிருந்தபடி நவம்பர் 27-ம் தேதியன்று ஹாதியாவை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.