நீதித்துறையின் உயர்மட்டங்களில் பெண்கள், ஓபிசி பிரிவினர்,
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ள
முடியாத வகையில் குறைவாகவே உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.
தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு
இந்திய சட்ட ஆணையம் மற்றும் நிதி ஆயோக் இரண்டு நாள் சந்திப்பை நடத்தின.
இதைத் தொடங்கி வைத்துப் பேசிய ராம்நாத், ''நீதித்துறையில் பெண்கள், ஓபிசி,
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ள
முடியாத வகையில் குறைவாகவே உள்ளது.
நம்முடைய மற்ற பொது நிறுவனங்களைப் போல, நீதித்துறையும் நாட்டின்
பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும்.நாட்டில்
உள்ள கீழ், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் உள்ள 17,000 நீதிபதிகளில்
4,700 பேர்தான் சிறுபான்மையின நீதிபதிகள். இவர்கள் பொது நீரோட்டத்தில்
நான்கில் ஒரு பங்கு என்ற வீதத்தில்தான் இருக்கின்றனர்.
இதைச்
சரிப்படுத்துவதற்கு நாம் நீண்டகால தீர்வுகளைப் பின்பற்ற வேண்டும். கீழமை
நீதிமன்றங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் சிறுபான்மையின நீதிபதிகள்
தங்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொண்டு அடுத்தகட்டத்தை அடைய
வேண்டும்.
அதே நேரத்தில் திறமையிலோ, தரத்திலோ சமரசம் எதுவும் செய்துகொள்ளாத வகையில் நீண்டகால தீர்வுகள் அமைய வேண்டும்'' என்றார்.
No comments:
Post a Comment