பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸார் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டதா என்பதை அறிய குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6
வாரம் அவகாசம் அளித்துள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா
கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் 7
பேர் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானுவும் கூட்டு பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் வேண்டுகோளை ஏற்று இவ்வழக்கு மும்பை
நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நீதிமன்றம் 12 பேருக்கு ஆயுள்
தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து போலீஸாரையும் இரண்டு
டாக்டர்களையும் விடுவித்தது. குற்றவாளிகள் சார்பிலும் சிபிஐ சார்பிலும்
செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் 12 பேரின் ஆயுள் தண்டனையை மும்பை
உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கடமையை செய்யத் தவறியதாகவும் ஆதாரங்களை
அழித்ததாகவும் ஐந்து போலீஸாரையும் இரண்டு டாக்டர்களையும் குற்றவாளிகளாக
அறிவித்தது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திர சூட் ஆகியோர் கொண்ட அமர்வு
முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட
போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பதை
அறிய குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரங்களுக்கு அவகாசம்
அளித்ததுடன் விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தது.
No comments:
Post a Comment