முஸ்லிமாக மதம் மாறி ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில்
சேர்ந்ததாக கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணை மீட்க வேண்டும் என்று
கோரிய தாயின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
கேரளாவைச்
சேர்ந்த பெண்மணி பிந்து சம்பத் என்பவரின் மகள், முஸ்லிம் இளைஞர் ஒருவரை
காதலித்து முஸ்லிமாக மதம் மாறி அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். 7
மாத கர்ப்பிணியாக இருக்கும்போது ஆப்கானிஸ்தானுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத
இயக்கத்தில் அந்தப் பெண் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்து பெண்களை தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த
முஸ்லிம் இளைஞர்கள் காதல் வலையில் விழவைத்து மதம் மாற்றுவதாக ஏற்கெனவே
குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிந்து சம்பத்
தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகள் பாத்திமா என்ற
நிமிஷா மதம் மாறி முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொண்டார். 7 மாத
கர்ப்பிணியாக இருந்த நிலையில், எனது மகள் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ்
தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் ஐஎஸ் கட்டுப்பாட்டில்
இருக்கும் கோராசான் மாகாணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
ஜிகாத்
ரோமியோக்கள் இந்துப் பெண்களை செல்போன்கள், பைக்குகள், நாகரீக உடைகள்
போன்றவற்றை பரிசளித்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி இதேபோல தங்கள்
தவறான நோக்கத்துக்காக தந்திரமாக பயன்படுத்துவதாக இந்தியா முழுவதும் பல
இடங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. ஜிகாத் ரோமியோக்கள் 2 வாரங்களில்
மாற்று மத பெண்ணை அடையாளம் கண்டு 6 மாதங்களில் அவர்களை மதம்
மாற்றுகின்றனர். 2 வாரங்களில் அந்தப் பெண் தங்கள் வலையில் விழவில்லை
என்றால் வேறு பெண்ணைத் தேடுகின்றனர். இதுபற்றி விரிவான விசாரணைக்கு உச்ச
நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
எனது மகள் பற்றிய நிலைமை தெரியாமல்
தவிக்கும் தாயாக நான் இருக்கிறேன். எனது மகளை தவறான வழியில் இருந்து மீட்க
எனக்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவின்
குண்டு வீச்சால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
இவ்வாறு பிந்து
சம்பத் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ரா, அடுத்த இரண்டு வாரங்களில் இந்த வழக்கு விசாரணைக்காக
பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment