இண்டிகோ நிறுவன ஊழியர்களால் பயணி ஒருவர் மூர்க்கத்தனமாக நடத்தப்பட்ட
விவகாரம் தொடர்பாக அந்நிறுவனம், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக்
கஜபதி ராஜூக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி விமான
நிலையத்தில் அக்டோபர் 15-ம் தேதி இண்டிகோ விமானத்தில் இருந்து இறங்கிய
ராஜீவ் கட்டியால் என்ற பயணிக்கும், அந்த விமான ஊழியர்களுக்கும் இடையே மோதல்
நடந்தது. பயணிகள் பஸ்சில் ஏற முயன்ற ராஜீவை ஏற விடாமல் மூர்க்கத்தனமாக
ஊழியர்கள் தடுத்தனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதையடுத்து பயணியிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ விமான
நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த
விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு விமானப் போக்குவரத்து
இயக்குநருக்கு, விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ
உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக விமானப்
போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூக்கு, இண்டிகோ விமான நிறுவனம்
விளக்க கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் நடந்த சம்பவங்களை காட்சி
வாரியாக விளக்கி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘ஊழியர்களால்
பயணி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தமில்லாமல் அங்கே வந்து வீடியோ
எடுத்ததாக கூறப்படும் ஊழியர் சரக்கு பிரிவை கையாள்பவர். அத்துமீறி
செயல்பட்ட அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் நடந்த
சம்பவத்திற்கு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அந்த பயணியின் நடவடிக்கையும்
காரணமாக அமைந்துள்ளது. நகரும் ஏணி அருகே செல்ல முற்பட்ட பயணியை ஊழியர் ஜூபி
தாமஸ் குரல் கொடுத்து தடுத்து நிறுத்த முற்பட்டார். ஆனால் அதை தவறுதலாக
புரிந்து கொண்டு அவர் சில வார்த்தைகளை கூறியுள்ளார். எனினும் பயணியின்
பாதுகாப்பை கருதி ஊழியர் மீண்டும் குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து
வாக்குவாதம் நடந்துள்ளது. வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல்
பார்த்துக் கொள்ளப்படும். பயணிகள் - ஊழியர்கள் உறவு சீராக இருப்பதை உறுதி
செய்வோம்’’ என இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment