கண் அறுவை சிகிச்சையினால் 66 பேருக்கு பார்வை பறிபோன வழக்கில் 3
மருத்துவர்களுக்கு தண்டனையை உறுதி செய்து திருச்சி மாவட்ட 3-வது கூடுதல்
அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் ஜோசப் கண்
மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் ஆகியவை
இணைந்து 28.07.2008 அன்று நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், விழுப்புரம்
மாவட்டம் நைனார்பாளையம், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 66 பேர் மேல்
சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை
செய்ததில் அனைவருக்கும் பார்வையிழப்பு ஏற்பட்டது.
மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அரசு சார்பில்
மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. மேலும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்த
தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தியும், இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்
கோரியும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, 2011-ம் ஆண்டு இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர்.
அதனடிப்படையில்,
ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநர் நெல்சன் ஜேசுதாசன், துணை இயக்குநர்
கே.அவ்வை, தலைமை நிர்வாகி ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர்கள் அசோக்,
சவுஜன்யா, தென்றல் பொன்னுதுரை மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகியோர் மீது கொடுங்காயம்
விளைவித்தல் சட்டப் பிரிவின் கீழ் 14.09.2011-ம் தேதி திருச்சி தலைமை
குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இரு
தரப்பு வாதங்களையும் விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர்,
கடந்த 22.4.2015 அன்று தீர்ப்பளித்தார். அதில், ஜோசப் மருத்துவமனை
இயக்குநர் நெல்சன் ஜேசுதாசன், தலைமை நிர்வாகி ஜே.கிறிஸ்டோபர் மற்றும்
மருத்துவர் அசோக் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மருத்துவமனை துணை இயக்குநர் கே.அவ்வை, மருத்துவர்கள் சவுஜன்யா,
தென்றல் பொன்னுதுரை மற்றும் தொழில்நுட்பப் பணியாளர் ஆண்ட்ரூஸ்
விடுவிக்கப்பட்டனர்.
இதுதவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக,
அவர்கள் கோரிய ரூ.5 லட்சத்தில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய
ரூ.4 லட்சத்தை இழப்பீடாகக் கருதி, அந்தத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டியுடன்,
கண் அறுவை சிகிச்சை செய்த தேதியிலிருந்து தீர்ப்பு தேதிவரை கணக்கிட்டு
வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து
நெல்சன் ஜேசுதாசன், ஜே.கிறிஸ்டோபர், அசோக் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை, திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு
நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அவற்றை விசாரித்த நீதிபதி (பொ)
லோகேஸ்வரன், இவ்வழக்கில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தால் ஏற்கெனவே
அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment