கோவையில் இயங்கிவரும் அச்சகத்தை இடமாற்றும் முயற்சியிலோ, மூடும்
முயற்சியிலோ மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட
அறிக்கையில், ''கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள
வீரபாண்டியில் மத்திய அரசின் அச்சகம் முன்னாள் முதல்வர் காமராஜரின்
முயற்சியால் கடந்த 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 132 ஏக்கர்
பரப்பளவு கொண்ட இந்த அச்சகம் 25 ஏக்கரில் தொழிற்சாலையும் மீதமுள்ள
பகுதியில் சுமார் 500 குடியிருப்புகள், மருத்துவமனை என பல்வேறு கட்டமைப்பு
வசதிகளுடன் இயங்கி வருகிறது.
தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் கோவை அச்சகத்தை கடந்த பிப்ரவரி மாதம்
பார்வையிட்ட மத்திய இயக்குநர் இந்த அச்சகத்தை சர்வதேச தரத்திற்கு தரம்
உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில், கடந்த
செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்
நாடு முழுவதும் உள்ள 17 அச்சகங்களின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள அச்சகத்தை மூடப்போவதாக
தெரியவந்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குவதற்கு
நடவடிக்கை எடுக்காமல் அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிப்பதும்
மூட முயற்சிப்பதும் ஏற்புடையதல்ல. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்
குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, கோவையில் உள்ள அச்சகத்தை இடமாற்றும்
முயற்சியிலோ, மூடும் முயற்சியிலோ மத்திய அரசு ஈடுபடக்கூடாது'' என்று வாசன்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment