Latest News

  

அமெரிக்கா, லண்டன் போல் மழைநீர் வடிகாலுக்கு சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் வேலுமணி பேச்சால் வாக்குவாதம்

சென்னையில் மழைநீர் வடிகால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்குமே மழைநீர் தேங்கவில்லை, அமெரிக்கா போன்று லண்டன் போன்று சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அமைச்சர் எஸ்.பி.வேலு பேசியதை அடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் வேலுமணி திணறினார்.

சென்னை மாநகராட்சியில் இன்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினார்.
''தமிழக அரசு முதல்வர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் சென்னையில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை, ஒரு சில இடங்கள் அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. 

எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். அவர் அப்படித்தான் சொல்வார். 

கடுமையான மழையை நாம் எதிர்கொண்டுள்ளோம் சமீபத்தில் பெங்களூருவில் மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியதை பார்த்தோம், அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட மழை பெய்யும் போது தண்ணீர் வந்து மிதந்தது. ஆனால் வளர்ந்த நாடுகளில் கூட எடுக்காத நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம். அந்த அளவுக்கு  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நவீன கருவிகளை வாங்கி கொடுத்துள்ளார். 

நிவாரணப் பணிகளில் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஐஏஎஸ் அதிகாரிகள் கடுமையாக உழைக்கிறார்கள்.  சிலர் 2015-ல் வந்த கடுமையான வெள்ளத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் அது சரியல்ல'' என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்கா, லண்டன் போல் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறீர்களே எங்கே அப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஒரு இடத்தை காட்டுங்கள் என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

சென்னையில் அனைத்து இடங்களிலும் அப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர், எங்குமே தண்ணீர் நிற்கவில்லை. இதற்கு முன்னால் தண்ணீர் நின்றது போல் இப்போது நிற்கவில்லை என்றார்.

ஒரு நாளில் பெய்த மழைக்கே தண்ணீர் அனைத்து இடங்களிலும் தேங்கியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு முன்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தது இப்போது 100க்கும் குறைவான இடங்களில் இருந்தது அதுவும் குறைந்துவிட்டது என்றார்.

அதற்கு செய்தியாளர்கள் தூர்வாரும் பணி முடிந்துவிட்டது என்கிறீர்களே இன்று காலைதான் வேளச்சேரியிலேயே தூர்வார ஆரம்பித்துள்ளார்கள், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம் என பல இடங்களில் இன்றும் தூர் வாரப்படவில்லை என்று கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து நீங்கள் எதிர்க்கட்சி சானல் என்று கூறினார். 

இதற்கு செய்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கவே ''இல்லையில்லை.  நான் இரண்டு மூன்று சானல்கள் பெயரைச்சொல்லியே சொல்ல முடியும்'' என்று கூறினார்.

நீங்கள் அமெரிக்கா, லண்டனை ஒப்பிட்டுச் சொல்கிறீர்களே எங்கு தூர் வாரினீர்கள் என்று கேட்டால் எதிர்க்கட்சி சானல் என்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்க, ''ஆமாம் அமெரிக்கா மட்டுமல்ல லண்டன், பெங்களூருவில் எவ்வளவு தண்ணீர் தேங்குது. இங்கு தண்ணீரே தேங்கவில்லை. உங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது'' என்று கூறி அரசு செய்யும் நல்ல விஷயங்களை கூறுங்கள் என்று கூறினார்.

உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். இதை நாங்கள் ஆலோசனையாக எடுத்துக்கொள்கிறோம் என்று கூறி அரசு செய்த விஷயங்கள் எனக் கூறி அமைச்சர் வேலுமணி அறிக்கையை படிக்க ஆரம்பித்தார்.

பேட்டியின் போது உடனிருந்த அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின் போன்றோர் எதுவும் சொல்லாமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அமெரிக்கா லண்டன் போன்ற இடத்தைவிட நன்றாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று கூறியதால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அரசின் அறிவிப்புகளை படித்துவிட்டு அமைச்சர் சென்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.