நாகப்பட்டினம் பொறையாறில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச்
சொந்தமான பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் போக்குவரத்து
தொழிலாளர்கள் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இது குறித்து போலீஸ்
தரப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துப் பணிமனை
உள்ளது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இன்று அதிகாலை
இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3
பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் காரைக்கால் அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேற்கூரை இடிந்துவிழுந்தபோது பணிமனையில் சில தொழிலாளர்கள் உறங்கிக்
கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே உயிரிழப்பு அதிகமாக இருந்துள்ளது.
இடிபாடுகளுக்கு இடையே இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன"
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிதிலமடைந்த நிலையில் இருந்த பணிமனையை சீர்படுத்த வேண்டி பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் போராட்டம்:
நாகை
அருகில் உள்ள பொறையாறில் அரசுப் போக்குவரத்துப் பணிமனை பழைய கட்டிடம்
இடிந்த விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள், திமுகவினர் மற்றும்
போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில்
ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும்
கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
மற்றும் அதிகாரிகளை பொதுமக்களும் போக்குவரத்துக் கழக ஊழியர்களும்
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம்
சலசலப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment