ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக டிடிவி தினகரன்
அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம்
நியமிக்கப்பட்டார்.
அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் மீது
நம்பிக்கை இல்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை
சந்தித்து மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து தினகரனும் எடப்பாடி அணியினர்
வகித்து வரும் கட்சி பதவிகளை பறித்து வருகிறார்.
அந்த பதவிகளுக்கு தமது ஆதரவாளர்களையும் தினகரன் நியமித்து வருகிறார்.
அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன் வைத்திலிங்கம்,
முக்கிய அமைச்சர்கள், கோகுல இந்திரா உள்ளிட்ட கட்சியின் மூத்த
நிர்வாகிகளின் பதவிகளை பறித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்
பொறுப்பில் இருந்து திருச்சி எம்பி குமாரை அதிரடியாக நீக்கினார் தினகரன்.
அப்போது திருச்சியில் பேட்டியளித்த எம்பி குமார், தினகரனுக்கு பித்தம்
முற்றிவிட்டது. அவருக்கு மூட்டை மூட்டையாக எலுமிச்சை பழங்களை அனுப்புங்கள்.
தினகரனுக்கு தைரியம் இருந்தால் முதல்வர் எடப்பாடியின் கட்சி பதவியை
பறித்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் சேலம்
புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நீக்கி இன்று உத்தரவிட்டார் தினகரன்.
அவருக்கு பதிலாக அப்பதவியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம்
நியமிக்கப்பட்டார். அதேபோல் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த ஜி.
வெங்கடாச்சலத்தின் பதவியையும் பறித்துவிட்டு அவருக்கு பதிலாக எஸ்.இ.
வெங்கடாச்சலத்தை நியமித்து தினகரன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment