உள்ளாட்சித் தேர்தலை நடத்த அஞ்சியே அதிமுக தனி அதிகாரிகளின்
பதவிக்காலத்தை மேலும் நீட்டித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின்
பதவிக்காலத்தை 2017 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதற்கான மசோதாவை
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த
மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர்
வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்
அறிவுறுத்தியது. அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையமும், அரசும்
நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இன்று மீண்டும் தனி அதிகாரிகளின்
பதவிக்காலத்தை அரசு நீட்டித்திருக்கிறது. இன்று அதற்கான மசோதா
நிறைவேற்றப்படும் பட்சத்தில் எங்களது எதிர்ப்பை காட்டுவதற்காகவே வெளிநடப்பு
செய்துள்ளோம்.
அதிமுகவிடம் இரட்டை இலை சின்னம் இல்லை, கட்சியும் இரண்டாக மூன்றாக
உடைந்திருப்பதால் தேர்தலை நடத்த அஞ்சுகிறது என்பது இதன் மூலம் தெளிவாக
தெரியவந்துள்ளது என்றார். நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு
நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த
ஸ்டாலின், மத்திய அரசை சொல்வதை அப்படியே அடிபணிந்து காலில் விழுந்து
ஏற்பதைத் தான் குதிரை பேர பினாமி ஆட்சி செய்கிறது.
பேரறிவாளன் பரோல் குறித்து நேரமில்லா நேரத்தில் இன்று பேசினேன். ஜெயலலிதா
முதல்வராக இருந்த போதே பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம்
போடப்பட்டது, ஆனால் இன்று பரோலில் விட யோசிக்கின்றனர். மத்திய அரசை காரணம்
சொல்கின்றனர்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில
அரசே பரோல் அளித்துள்ளது. அந்த அடிப்படையிலாவது பேரறிவாளனுக்கு பரோல் வழங்க
வேண்டும் என்று கூறினேன், ஆனால் அதற்கு முதல்வரோ, அமைச்சர்களோ பதில்
அளிக்கவில்லை. சபாநாயகரும் முதல்வரிடம் பதில் இல்லை இது குறித்து பின்னர்
பதில் அளிக்கப்படும் என்று பூசி முழுகும் வகையில் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment