தமிழகத்தில் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் மக்கள் மத்தியில்
காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வாய்ப்பை
தமிழக காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி
ஆலோசனை கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று
சென்னை வந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94ம் பிறந்தநாள் விழா
மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக தி.மு.க செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவர்
அளித்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டார். மு.க.ஸ்டாலின்
பேரப்பிள்ளைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். கருணாநிதியின்
வைரவிழா பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி சாந்தோம் எம்.ஆர்.சி
நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கினார்.
ஸ்டார் ஹோட்டலில் ஆலோசனை
இன்று காலை ராகுல் காந்தி, தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலில் தமிழக காங்கிரஸ்
கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 8
எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக ஆட்சி பற்றி கேட்டார்
அவர்களுடன் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அரசியல் கட்சி
நிலவரம் பற்றி கேட்டறிந்தார். கட்சி வளர்ச்சிக்கு எப்படி பணியாற்றினால்
நன்றாக இருக்கும் என்றும் கேட்டார். தற்போதைய ஆட்சி பற்றியும்
எம்.எல்.ஏக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு
இப்போது தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலை காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பை
ஏற்படுத்தித் தந்துள்ளது. எனவே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
ராகுல் காந்தி ஆலோசனை வழங்கினார்.
சத்திய மூர்த்தி பவன் வருகை
ராகுல் காந்தி சத்யமூர்த்தி பவனுக்கு மதியம் 12.37 மணிக்கு வந்தார். அங்கு
அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள்
வரவேற்றனர். பவனில் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து காமராஜர் சிலைக்கும்,
தீரர் சத்யமூர்த்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அணிவகுப்பு மரியாதை
இதைத்தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவாதள தொண்டர்கள்
அளித்த அணிவகுப்பு மரியாதையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். சத்யமூர்த்தி
பவனில் அமைக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி நினைவு நூலகத்தையும் திறந்து
வைத்தார்.
தீவிர ஆலோசனை
காங்கிரசின் மாநில நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் மாநில தலைவர்கள், மாவட்ட
தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 268 பேர் கலந்து கொண்ட
ஆலோசனை கூட்டத்தில் ராகுல் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசியல் நிலவரம்
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காங்கிரஸுக்கு சாதகமாக
உள்ளது. இதை நாம் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment