Latest News

மாணவி உள்ளாடையை அகற்றக் கூறியது அபத்தத்தின் உச்சம் - கனிமொழி

 Kanimozhi blasts NEET officials for the ridiculous conditions to the students
நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது அபத்தத்தின் உச்சம். நாகரீக சமுதாயத்தின் அடிப்படை கண்ணியத்தை உடைக்கும் செயல் என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: திராவிட முன்னேற்ற கழகம் நீட் தேர்வை முழுமையாக எதிர்ப்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்கென கூறி சி.பி.எஸ்.இ விதித்த கட்டுப்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. மாணவர்களை இவ்வாறு அவமானப்படுத்துவது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது மனித உரிமை மீறல். தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டுள்ள இந்த சூழலில் இவர்கள் எந்த காலத்தில் வாழ்கிறார்கள்? முறைகேடுகள் தடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நிகழ்ந்தவை யாவும் அபத்தமானவை. மாணவிகளின் சிறிய தோடுகளையும் மூக்குத்திகளையும் அகற்றும்படி கூறியது தேவையற்றது. முழுக்கைச் சட்டை அணிய விதிக்கப்பட்ட தடையும் ஏற்க முடியாதது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் மாணவி ஒருவர் அணிந்திருந்த உள்ளாடையை அகற்றக் கூறியிருப்பது அபத்தத்தின் உச்சம். இச்செயல் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், ஒரு நாகரீக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் அடிப்படை கண்ணியத்தை உடைப்பதாகவும் உள்ளது. இவ்வளவு கெடுபிடிகளைத் தாண்டி அவர்கள் எந்த மனநிலையில் இந்த தேர்வை எதிர்கொண்டிருப்பார்கள்? கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட பிறகு அவர்களால் எப்படி முழு கவனத்தையும் செலுத்தி தேர்வு எழுதியிருக்க முடியும்? நாம் நீட் தேர்வையே எதிர்த்துவரும் நிலையில், இனி எந்த தேர்வாக இருந்தாலும், விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாமானவையாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.