உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப்போகும் செய்திகளை, 100ஆண்டுகளுக்கு முன்னர் கதையாகச் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்க மாட்டார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து பிறக்கப்போகும் தலைமுறையினரிடம் இந்தச் செய்திகளைக் கூறினால்,அவர்கள் கடும் கோபம்கொள்வார்கள். பூமியில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் நீர்வாழிகள்தான். அவற்றில் மீன்கள், குறிப்பிடத்தக்க வகையில் மனிதர்களின் வரலாற்றுடன் இணைந்து வாழ்பவை. அந்த மீன்களின் இனத்தைக்கூட நவீனத்தின் பேரால் அழித்துவருகிறது இந்தக் கால அறிவுத் துறை.
கோடையில் வறண்டுகிடக்கும் குளங்களிலும் குட்டைகளிலும் மழைத்துளிகள் விழுந்தவுடன் மீன்குஞ்சுகள் உருவாகின்றன. பாளம் பாளமாக வெடித்துக்கிடந்த நீர்நிலைகளில் மழைக்கால வெள்ளம் மீன் கூட்டத்தை வளர்க்கிறது. எந்த மனிதரும் ஒவ்வொரு நீர்நிலைக்கும் சென்று மீன் முட்டைகளை வீசுவது இல்லை. புல்கூட காய்ந்துபோன குளத்தில் மீன் முட்டைகள் உயிர் காத்துக்கிடக்கின்றன,மழைக்காலம் வரைக்கும். இதுதான் படைப்பின் கருணை.
மாங்குடிக்கிழார் இயற்றிய புறநானூற்றுப் பாடலின் காட்சி இது, `செழித்து விளைந்திருந்த வயல்களில் நீர் தேங்கியுள்ளது. இந்த நீர் மேல், கீழ் என இருவகைகளாக உள்ளது. மேலே உள்ள நீர், குவளை மலர்களை வளர்த்தெடுக்கிறது; கீழே உள்ள நீர், மீன்களை வளர்க்கிறது. நெற்பயிர்களைக் கொத்தித் தின்னும் பறவைக் கூட்டத்தை ஓட்டுவதற்காக மக்கள் பறை முழக்கம் செய்கின்றனர். அந்த முழக்கம் கேட்டு, கடலில் இரை தேடும் பறவைகள்கூட பறந்தோடுகின்றன.’
வயல்களில் மீன் கூட்டம் இருந்த காட்சிகள், நமது சங்கப் பாடல்களில் விரவிக்கிடக்கின்றன.
கழனிகளில் வேலைசெய்ய வரும் மக்கள், வீடு திரும்பும்போது வயல்களிலும் வாய்க்கால்களிலும் மீன் பிடித்துச் செல்வது, கடந்த 30ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வழக்கம். வாய்க்கால்களில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது சிறுவர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. கெளுத்தி, ஆரல், மஞ்சள் பிரட்டை, கச்சைப்பொடி,குறவை, அயிரை, விலாங்கு,கொக்குமீன், வாளை, விறால்,கெண்டை ஆகியவை,அனைவருக்கும் தெரிந்த மீன் வகைகள்.
காவிரி ஆற்றில் நீர் பெருகி ஓடும்போது, கால்வாய்களின் மதகுகள் திறக்கப்படும். மதகுகளின் ஊடாகப் பீறிட்டுப் பாயும் நீரை எதிர்த்துக்கொண்டு அயிரை மீன்கள் துள்ளிக் குதித்து,மதகுகளின் சுவர்களில் அப்பிக்கிடக்கும். நாங்கள் குளிக்கச் செல்லும்போது மதகுச் சுவர்களில் இருந்து அயிரை மீன்களை அள்ளிக்கொள்வோம்.
வாய்க்கால்களின் இருமருங்கிலும் மண்டிக்கிடந்த புதர்களுக்குள் நுழைந்து மெள்ள நடந்தால், கால்களின் கீழே சேற்றுக்குள் கிடக்கும் குறவைகளும் விறால்களும் சிக்கும்.
இவை எல்லாம், சங்கக் காட்சிகள் அல்ல; 20ஆண்டுகளுக்கு முந்தைய காட்சிகள். `பசுமைப் புரட்சி'எனும் பெருநிறுவனங்களின் பேராசைக் கனவு, நமது வயல்களை நஞ்சுக் கூடங்களாக்கி, மீன் இனங்களைக் கூண்டோடு அழித்துவிட்டது. `மீன்வளத் துறை' எனப் பேர்கொண்ட அரசுத் துறை, நமது மரபுவழி மீன் வகைகளை எல்லாம் ஒழித்துக் கட்டும்படியான திட்டங்களைச் செயல்படுத்தியது. விளைவு, இப்போதைய தலைமுறைக்கு மேற்கண்ட மீன்களைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகமே இல்லாமல்போனது.
ஒரு காலத்திலும் சரிசெய்யவே இயலாத செயல் ஒன்றை அரசு செய்துள்ளது.`திலாப்பியா' எனும் அயல்நாட்டு மீன் வகையை தமிழகத்தில் பரப்பிவிட்டது மீன்வளத் துறை. அந்த மீன் சிலேபி, கெண்டை என்று இப்போது அழைக்கப்படுகிறது. அதிவேகமாகவும் மிக அதிகமான எண்ணிக்கையிலும் குஞ்சு பொரிக்கும் குணம்கொண்டது இந்த மீன். நமது மரபு மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை உணவுப்பழக்கம் கொண்டது. குறிப்பாக, பருவ நிலைகளுக்கு ஏற்ப மீன் இனங்கள்தான் இயற்கையாகப் படைக்கப்பட்டன. திலாப்பியா இவற்றுக்கு அடங்காத வகை. நீர்நிலையில் கிடைக்கும் எல்லா வகை உணவுகளையும் அது உட்கொள்ளும். எல்லா பருவங்களிலும் தாக்குப்பிடித்து இனப்பெருக்கம் செய்யும்.
இந்த மீன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்,இவற்றின் எண்ணிக்கைப் பெருக்கத்தினால் நமது நாட்டு வகை மீன் இனங்கள் அதிவேகமாக அழிந்தன. முன்னர் நான் குறிப்பிட்ட பல வகை மீன்கள் இப்போது அரிதாகிவிட்டன. முற்றிலும் அழிந்த மீன் வகைகளின் பட்டியலும் பெரியதுதான். சீமைக் கருவேலமரம் நமது நிலத்தின் வளத்தைச் சூறையாடுவதைப்போல, `திலாப்பியா' நமது நீர்நிலைகளின் மீன் இனங்களை ஒழித்துவருகிறது.
நாட்டு மீன்களின் உணவு,வாழிடம் ஆகியவற்றை,திலாப்பியா வெகு எளிதாகப் பறித்துக்கொள்கிறது. கடந்த30 ஆண்டுகளில் நமது மரபு மீன்களைக் காக்க மீன்வளத் துறை பணியாற்றியிருந்தால்,நம்மிடம் பலநூறு மீன் இனங்கள் இருக்கும். நடந்ததோ தலைகீழான செயல்பாடு.
விவசாய நிலங்களில் குட்டைகள் அமைத்து,நவீனமுறையில் உருவாக்கப் பட்ட கெண்டை மீன்களை வளர்க்கும் தொழிலை மீன்வளத் துறை தொடங்கி வைத்தது. கட்லா, ரோகு,மிருகால் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.`ஆரல் மீன்கள் நீந்தும் வயல்களைக் கொண்ட ஊர் என் ஊர்' என மார்தட்டியவர்களின் நாட்டில் மீன்வளத் துறை அறிமுகம் செய்த மீன்கள் இவை.
ஆறு மாதங்களில் ஒரு மீன் ஒரு கிலோ எடைக்கு வர வேண்டும் என்ற எழுதப்படாத விதியை,தனியார் மீன் தீவன நிறுவனங்களும், பண்ணை உரிமையாளர்களும்,இன்னபிற மேதைகளும் இணைந்து உருவாக்கினார்கள். இதற்காக,வளர்ப்பு மீன் குட்டைகளில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. குளத்துநீரில் அதிவேகமாகப் பாசி பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், வேறு பல தாவர நுண்ணுயிரிகள் பெருக வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன ரசாயன உரங்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன.
பிராய்லர் கோழிப்பண்ணைகளில் இருந்து கோழிக்கழிவுகள் வாங்கப்பட்டு, வண்டி வண்டியாக வளர்ப்பு மீன் குட்டைகளில் கொட்டப்படுகின்றன. இதுவும் மீன்களுக்கான சத்துணவுதான். இறந்துபோகும் நாய் மற்றும் கால்நடைகளை, குளத்தில் வீசுவது பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மற்றொரு வழிமுறை. இந்தப் பிணங்களை, சிலவகைக் கெண்டை மீன்கள் விரும்பி உண்ணும். இதனால் அவற்றின் எடை மிக விரைவில் அதிகரிக்கும்.
இன்னும் பல நவீன வழிமுறைகளை எல்லாம் கையாண்டு, மீன் உற்பத்தி பல மடங்கு உயர்த்தப்பட்டது. ஒருபக்கம் நமது நீர்நிலைகளில் ரசாயன நஞ்சுக்களும் அயல் மீன்வகைகளும் நாட்டுமீன்களை ஒழித்துக்கட்டுகின்றன. மறுபக்கம், வளர்ப்புமீன் குட்டைகளில் பெரும்பாலானவை லாபவெறியுடன் உயிர்விளையாட்டுக்களை நிகழ்த்திவருகின்றன.
இந்த இடத்தில் ஒரு வேதிப்பொருளின் பெயரை உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமை. `டெல்டாமெத்ரின்' (Deltamethrin) என்பது,கால்நடை மருத்துவத் துறையில் நன்கு அறிமுகமான வேதிப்பொருள். இதை அடிப்படையாகக் கொண்டு சில உயிர்க் கொல்லிகள் தயாரிக்கப் படுகின்றன. கால்நடைகளின் மேல் இருக்கும் பூச்சிகள்,வண்டுகள், உண்ணிகள் போன்ற உயிரினங்களைக் கொல்வதற்காக இந்த நஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வெளிப்புற மருந்து மட்டுமே என்பது முக்கியமானது. அதாவது,இது தோலில் பூசுவதற்குத்தானே தவிர,உட்கொள்வதற்கு அல்ல.
`சைபர்மெத்ரின்' (Cypermethrin) என்ற வேதி நஞ்சும் இதேவிதமான பயன்பாட்டுக்கு உரியது.
பல வளர்ப்பு மீன் குட்டைகளில், இந்த வேதிப்பொருட்கள் புட்டிபுட்டியாக ஊற்றப் படுகின்றன. இங்கே நான் வேதிப்பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வளர்ப்பு மீன் குட்டைக்காரர்கள் பலருக்கு,இவற்றுக்கான நிறுவனங்களின் பெயர்கள் நன்கு தெரியும். மீன் குட்டைகளில் வளரும் சிறு புழுக்கள் மற்றும் பூச்சிகளை அழிக்க இவற்றைத் தவிர வேறு வழி இல்லை என்பது அவர்கள் கருத்து.
டெல்டாமெத்ரின்,சைபர்மெத்ரின் ஆகியவற்றை ஒரு மாட்டின் தோலில் பூசினால்கூட 2 மி.லி., 3 மி.லி என்ற மிக மிகக் குறைந்த அளவில்தான் பூசவேண்டும். அளவு கூடினால் மாட்டின் உயிருக்கே ஆபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம். வளர்ப்பு மீன் குட்டைகளில் இந்த நஞ்சுகள் ஊற்றப்படும் அளவைக் கேட்டால் வெறுப்புதான் மிஞ்சும்.
டெல்டாமெத்ரின்,சைபர்மெத்ரின் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால்,மனிதர்களுக்கு உருவாகும் நோய்களைப் பற்றிய ஆய்வுகள் பின்வரும் பட்டியலை வெளியிடுகின்றன. வலிப்பு நோய், உடலில் உருவாகும் திடீர் துடிப்புகள், தோலில் உருவாகும் அழற்சிகள்,கடுமையான மலக்கழிச்சல்,வேறுபல ஒவ்வாமை வெளிப்பாடுகள்.
மிகப் பெரும்பாலான வளர்ப்புக் கெண்டை மீன்களின் உடல் மேற்கண்ட நஞ்சுக்களையும் கழிவுகளையும் உட்கொண்டுதான் வளர்கிறது. இந்தக் கெண்டைகள்தான் பல கோடி மனிதர்களுக்கான சத்துணவு.
`இந்த நாட்டில் மீன் வளர்ப்பதற்கு இவ்வளவு குரூரமான வழிமுறைகள் ஏன் உருவாக்கப்படுகின்றன?'என்பதுதான் நாம் எழுப்பவேண்டிய கேள்வி.`எல்லோருக்கும் மீன் உணவு' என்ற முழக்கத்தின் உண்மையான பொருள், `எல்லோரும் நோயாளி களாக வேண்டும்' என்பதுபோல் இருக்கிறது. ஆறு மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மீன் வளர்ப்பது கடந்த காலம். ஏறத்தாழ மூன்றே மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மீன் வளர்க்கும் திறமைவாய்ந்த(?)பண்ணைகள் இப்போது பெருகிவிட்டன.
எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக நியாயப்படுத்திவிடலாம். நான் மனங்களோடு உரையாடுவதை மட்டுமே விரும்புகிறேன்.
மரபுவழியிலான எல்லா உணவுப் பொருட்களையும் தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பங்களால் அழித்துவிட்டு,அவற்றுக்குப்‘புரட்சி’கரமான பெயர்களையும் சூட்டும் மேதைகளின் மனங்களை நோக்கி நாம் அனைவரும் இந்த வாசகத்தை அனுப்பிவைப்போம்.
அறிந்தோ அறியாமலோ,நமது உணவு நஞ்சாக மாறுவதற்கு நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். கோடானுகோடி உயிரினங்களின் வாழ்வுரிமையை உங்கள் தொழில்நுட்பங்களால் பறித்துக்கொண்டீர்கள். உணவு நஞ்சானதால், சூழல் நஞ்சானதால் நோயுற்றுச் சாகும் மனிதர்களின் எண்ணிக்கை உயர்வதைப் பாருங்கள். இந்தப் பணிக்காக நீங்கள் பெறும் பொருளாதாரமும் பதவியும் புகழும் இன்னபிறவும்,நிச்சயமாக இந்த உயிர்களைவிட மேலானவை அல்ல. இப்போதாவது மனம் திருந்தி, உணவை நஞ்சாக்கும் நுட்பங்களைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து, விலகிக் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையை வாசித்து,ஏதேனும் செய்யவேண்டும் என விரும்புவோரிடம் நான் கேட்கும் உதவி ஒன்று உண்டு. உங்களுக்கு நிலம் இருந்தால், அதில் ஒரு சிறு பகுதியையாவது ஒதுக்கி,குட்டை வெட்டி, நீர் தேக்கி,நமது நாட்டு மீன் வகைகளை வளர்க்கத் தொடங்குங்கள். அவை மிக மெதுவாக வளரும். வணிக நோக்கம் இல்லாமல், நமது மீன் இனங்களைப் பாதுகாக்கிறோம் என்ற உன்னத நோக்கத்துக்காக இதைச் செய்யுங்கள். இவ்வாறு வளரும் மீன்களை,சக ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
பிசாசுகளின் வெறியாட்டத்தில் வயல்களும் சேமிப்புக் கிடங்குகளும் தீக்கு இரையான பின்னர், ஒரே ஒரு நெல்மணியைச் சேர்த்துவைக்கும் எவரும் தேவதூதர்தான். அவ்வாறான புனிதப் பணியில் ஈடுபடவேண்டிய சூழலில்தான் நாம் வாழ்கிறோம்!
திரு. ம.செந்தமிழன்அவர்களால் எழுதப்பட்ட ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment