Latest News

நீதிபதி கர்ணன் விவகாரம்.. ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா? திருமாவளவன்

 The Supreme Court should re consider the order for justice karnan issue, says Thiruvavalavan
ஊடக சுதந்திரத்துக்கு ஆட்சியாளர்களாலும், அடிப்படைவாத சக்திகளாலும் அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக உச்சநீதிமன்றமே தடை ஆணை பிறப்பிப்பது முறைதானா? என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதித்துறையின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஊடக சுதந்திரத்துக்கு ஆட்சியாளர்களாலும், அடிப்படைவாத சக்திகளாலும் அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக உச்சநீதிமன்றமே தடை ஆணை பிறப்பிப்பது முறைதானா? என்பதை மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சட்டங்களை சீராய்வு செய்யும் அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்கக்கூடாது என அரசியலமைப்புச் சட்ட அவையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் அவசியம் என வலியுறுத்திய புரட்சியாளர் அம்பேத்கர் 'அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளின் பாதுகாவல் நீதிமன்றங்கள்தான்' என விளக்கமளித்ததை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

அப்படி பாதுகாவலாக விளங்கவேண்டிய நீதிமன்றமே ஊடக உரிமையைப் பறிக்கின்ற உத்தரவைப் பிறப்பிப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதிபதி கர்ணனை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அந்த உத்தரவு மனநல பாதுகாப்பு சட்டத்துக்கு, 'செல்வி எதிர் கர்நாடக மாநில அரசு' என்ற வழக்கில் உச்சநீதிமன்றமே வழங்கிய தீர்ப்புக்கும் முரணாக இருப்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

நீதிபதி கர்ணனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என உச்சநீதிமன்றம் உண்மையாகவே கருதியிருந்தால் அவருக்கு எப்படி தண்டனை வழங்கியது என்பது புரியாத புதிராக உள்ளது. மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறிய ஆலோசனையின்படி ஜூன் மாதத்தில் ஓய்வுபெறப் போகும் நீதிபதி கர்ணனின் வழக்கைக் கிடப்பில் போட்டிருந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

நீதிபதி கர்ணன் தவறிழைத்திருந்தால் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவரைப் பதவிநீக்கம் செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டியிருப்பதுபோல பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித்தான் அவரைத் தண்டிக்கவேண்டும். அதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. இது உச்சநீதிமன்றம் அறியாத ஒன்றல்ல.

'உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் கீழே பணியாற்றும் பணியாளர்கள் அல்ல, உயர்நீதிமன்றத்தையோ உயர்நீதிமன்ற நீதிபதிகளையோ கட்டுப்படுத்தக்கூடிய சட்ட அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குக் கிடையாது. பணியிலிருக்கும் ஒரு நீதிபதியை நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யலாம் என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்' என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் எச்சரிக்கை கவனத்துக்குரியதாகும்.

ஆட்சியாளர்கள் அதிகாரத்துவத்தை மேலும் மேலும் சார்ந்திருக்க முற்படும் இன்றைய சூழலில் ஜனநாயகத்தைக் காப்பதில் முன் எப்போதைக்காட்டிலும் இப்போது நீதிதுறைக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. அதை கவனத்தில் கொண்டும் நீதித் துறையின் மாண்பைக் கருதியும் நீதிபதி கர்ணன் தொடர்பான ஆணையை மறு ஆய்வு செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.