நடிகர் ரஜினிகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக முன் வைத்து அரசியல்
கட்சிகள் மெகா கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பு கிளம்பியுள்ளது.
அதிமுகவின் அக்கப்போருகளை தூக்கி சாப்பிட்டு விட்டது என்றே சொல்லலாம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றிய பரபரப்பு. போர் வரும் போது
பார்த்துக் கொள்ளலாம் தயாராக இருங்கள் என்ற ரஜினிகாந்த் சொன்னதே ஒரு
சமிக்ஞை தான் என்று உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
ரஜினியை விட்டால் பாஜக தமிழகத்தில் காலூன்ற வேறு வழியில்லை என்று
எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ரஜினியை முதல்வர் வேட்பாளராக
அறிவித்து மாநில கட்சிகள் சிலவற்றுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க காய்
நகர்த்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்
முடிந்து விட்ட நிலையில் நல்ல நாளுக்காக மெகா கூட்டணி காத்திருப்பதாக
சொல்லப்படுகிறது.
அமித்ஷா
அமித்ஷா நாட்டின் அனைத்து பகுதியிலும் காவிக் கொடியை பறக்கவிடும் நோக்கில்
தீயாக வேலை செய்து வருகிறார் பாஜக தலைவர் அமித்ஷா. கடந்த வாரம் அமித்ஷா
தமிழகம் வருவதாக இருந்த நிலையில் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கும் ரஜினியின் பேச்சுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் பாரதிய
ஜனதா கட்சியினர். "லெட் ஹிம் டேக் சென்டர் சீட்" என்று அமித்ஷா ரஜினிக்காக
காத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
முதல்வர் வேட்பாளர் ரஜினி?
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஓபிஎஸ் அணி, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய
தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் பேச்சு
அடிபடுகிறது. அதிமுக சசிகலா அணி, திமுக, இடதுசாரிகளைத்தவிர்த்து பாட்டளி
மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய
கட்சிகளுக்கும் விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த் என்று
உறுதிப்படுத்துகின்றன கட்சி வட்டாரங்கள்.
தயாராகும் ரஜினி
அரசியலுக்கு வரவேண்டும் என மோடியிலிருந்து, ரசிகர்கள் வரை அழுத்தம்
கொடுக்கும் நிலையில், தனிக்கட்சி தொடங்க ரஜினி தயாராகிவிட்டார் என்று மூத்த
ரசிகர் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார். இதன் வெளிப்பாடாகவே ஸ்டாலின்,
அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரை ரஜினி புகழ்ந்து பேசியதாக
தெரிவிக்கிறார்.
கட்சிக் கொடி தயார்
கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை வடிவமைக்கும் பணிகள் மிக ரகசியமாக
நடந்துவருவதாகவும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
இமயலையிலிருக்கும் ரஜினியின் குருவிடம் அனுமதி பெற்ற பிறகு கொடி, சின்னம்
வெளியாக வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. போர் முரசு ஒலிக்கும் நாளுக்காக
ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment