உயர்நீதிமன்றம் முடித்து வைத்த தனுஷ் தொடர்பான வழக்கை மேல்முறையீடு
மேலூர் தம்பதிகள் செய்தால் அதனை எதிர் கொள்வேன் என்று இயக்குநரும் நடிகர்
தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி
தம்பதியினர், சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான்
நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க
வேண்டும் என்றும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலூர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நடிகர் தனுஷ் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென
உத்தரவிட்டப் பிறகு பரபரப்பானது. இதையடுத்து கதிரேசன் மீனாட்சி யாரென்றே
எனக்கு தெரியாது. ஆகையால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ்
தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அங்க அடையாளங்கள்
தனுஷ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்துக்
கொண்டிருக்கும்போதே, கதிரேசன் தரப்பினர், தனுஷ் தங்கள் மகன்தான் என
ஆதாரங்களை தாக்கல் செய்தனர். அதுமட்டுமில்லாமல் தனுஷின் உடலிலுள்ள அங்க
அடையாளங்களையும் குறிப்பிட்டனர். இதை பரிசீலித்த நீதிபதி, தனுஷ் தரப்பிலும்
அவர்களுக்கு சாதகமான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
முரண்பாடு
அதன்பின்பு கஸ்தூரிராஜா தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும்
முரண்பாடாக இருக்கிறது என்று கதிரேசன் தரப்பு சந்தேகம் கிளப்ப, கடைசியாக
தனுஷின் உடலில் அங்க அடையாளங்களைசக் சரிபார்க்க உத்தரவிட்டார். அதற்காக
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் ஆஜரானார்.
டிஎன்ஏ டெஸ்ட்
இதற்கிடையே கதிரேசன் தம்பதியினர் தனுஷிற்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த
உத்தரவிடவேண்டும் என்று மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை
மார்ச் 2-ம் தேதி விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை மேலூர்
நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தடை விதித்தார்.
லேசர் மூலம் அழிப்பு
இதற்கிடையே மருத்துவர் தாக்கல் செய்த அறிக்கையில் கதிரேசன் தம்பதியினர்
குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடம்பில் இல்லையென்றாலும், சில
தழும்புகள் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால் இந்த
வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தள்ளுபடி
இந்நிலையில், தனுஷின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கதிரேசன்
மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதனை சற்றும்
எதிர்பாராதா தம்பதிகள் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தனர்.
மேல்முறையீடு
இந்நிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தம்பதிகள் மேல்முறையீடு செய்தால்
அதனை எதிர் கொள்வேன் என்று கூறியுள்ளார். 2002ல் காணாமல் போன மேலூர்
தம்பதிகளின் மகன் ஒரே ஆண்டில் எப்படி திரைப்படத்தில் நடிக்க முடியும் என்று
கேள்வி எழுப்பினார்.
எதிர்கொள்வோம்
மேலும் அவர்களது மகன் காணாமல் போகும் முன்பே தனுஷ் நடித்து வந்ததாகவும்
கஸ்தூரிராஜா விளக்கம் அளித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கில் மேலூர்
தம்பதிகளை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்றும் கஸ்தூரிராஜா
புகார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment