பெருமை மிக்க பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை
ஆகியவற்றில் உள்ள பழமை வாய்ந்த உயர்நீதிமன்றங்களில் பெண்கள் தலைமை
நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அண்மையில் இந்திரா பானர்ஜி
பதவி ஏற்றார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரோஹினியும்,
மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மஞ்சுளா செல்லூரும் ,
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிஷிதா நிர்மல்
மகாத்ரேவும் (பொறுப்பு) ஏற்கனவே உள்ளனர்.
நான்கு பெண்கள் ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை வகிப்பது
இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். அதுவும் பழமைவாய்ந்த சென்னை, மும்பை,
கொல்கத்தா, டெல்லி ஆகிய உயர்நீதிமன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாக
வீற்றிருப்பது பெருமை மிக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. என்றாலும்,
மொத்தமாக உயர்நீதிமன்றத்தில் உள்ள பெண் தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை ஒரு
சதவீதம் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகவே உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 24 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அதில் தற்போது
பதவி வகிக்கும் நீதிபதிகள் 652 பேர். அவர்களில் 69 பேர் மட்டுமே பெண்கள்.
இவற்றிலும் அதிகபட்சமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகள்
உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகளும் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள 8 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment