தஞ்சை அருகே டாக்டர் ராஜப்பன் கொலை வழக்கில் அவரது மகள் உட்பட 6 பேரை
போலீசார் கைது செய்துள்ளனர். சொத்துக்காக பெற்ற மகளே கொலை செய்தது
விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கள்ளுக்கடை சந்து தெருவை சேர்ந்தவர் டாக்டர்
ராஜப்பன். 65 வயதான இவர் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் அரசு
ஆஸ்பத்திரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஒரத்தநாடு பஸ் நிலையம்
அருகே சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தார்.
இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசிக்கின்றனர். இந்நிலையில்
கடந்த 21ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் டாக்டர் ராஜப்பன் தனது வீட்டின்
முன் நின்றுகொண்டிருந்தார்.
கத்தியால் குத்திக் கொலை
அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ராஜப்பனை கத்தியால் சரமாரியாக
குத்தினர். மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்துப்பட்டு அதே இடத்தில்
இறந்தார். டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
ஆனால் அதற்குள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். உடனே அப்பகுதி மக்கள்
ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தனர்.
அப்பகுதி மக்கள் கண்ணீர்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது
ராஜப்பன், அப்பகுதி மக்களிடம் அன்பாக பேசுவார். சிகிச்சைக்கு வருபவர்களிடம்
முதலில் குடும்ப சூழ்நிலை குறித்து விசாரித்தபிறகுதான் சிகிச்சை
அளிப்பார். ஏழைகளிடம் குறைந்த கட்டணம்தான் வாங்குவார். அப்படிப்பட்டவர்
கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க
கூறினர்.
மகள் தீபிகா மீது சந்தேகம்
இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். என்ன காரணத்துக்காக
ராஜப்பன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்த
போலீசாருக்கு சென்னையில் வசிக்கும் அவரது மகள் தீபிகா மீது சந்தேகம்
ஏற்பட்டது.
சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகள்
தீபிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை
கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மகள் உட்பட 6 பேரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி மகள்
கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ராஜப்பனின் மகள் தீபிகா ஒரு மாற்றுத்திறனாளி
ஆவார். சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை மகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment