பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று
டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தஞ்சை மாவட்டத்தில்
எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இது புதிய
சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழக முதல்வராக அண்மையில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர்
மோடியை சந்திக்க நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இன்று மாலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது, மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு
எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். காவிரி
ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு
தடை விதிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு
எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம் ஆகிய பிரச்சினைகள்
குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி, வர்தா புயல் நிவாரணமாக ரூ.22,573 கோடி விடுவிக்க வேண்டுகோள்
விடுத்துள்ளேன். தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமரிடம்
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மீன் வள பரவலாக்கும் தொகுப்பு திட்டத்துக்கு
ரூ.1,650 கோடி கோரியுள்ளது. காவிரி நதிநீர் வாரியம் மற்றும்
ஒழுங்குமுறைக்குழு அமைக்கவும் வலியுறுத்தி உள்ளேன் என்று என்று கூறினார்.
அத்திக்கடவு-அவினாசி கால்வாய்த் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவும்
பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்கள்,
130 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
இதில் தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதுதான் சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் தமிழகத்தில்
எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டு அறிவிப்பு
வெளியிட்டது. இதற்காக ஒரே இடத்தி்ல 200 ஏக்கர் நிலம் தர தமிழக அரசிடம்
கோரியது.
இதையடுத்து மதுரை தோப்பூர், தஞ்சாவூர் செங்கிப்பட்டி, புதுக்கோட்டை,
செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்கள் பரிசீலனை
செய்யப்பட்டன. அங்கு ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதன் இறுதியில் மதுரை தேர்வு
செய்யப்பட்டதாக கூறப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் தேர்வாகவும்
பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில்தான் ஜெயலலிதா திடீர் மரணமடைந்தார்.
தற்போது தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட மன்னார்குடி குரூப்பின்
கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக அரசு இந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டு
தஞ்சையைக் கையில் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. தஞ்சாவூரில் எய்ம்ஸ்
என்பது நிச்சயம் மன்னார்குடி குரூப்பின் யோசனையாகவே இருக்கும் என்றும்
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment