தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும்,
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கிடைத்துவிட்டது எனவே மாணவர்கள்
போராட்டத்தை கைவிட்டு திரும்பலாம் என ஹிப்ஹாப் ஆதி கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான
சட்ட மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக
சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிப்பதற்கான
சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு
பிறப்பித்த அவசர சட்டத்தை, சட்டமாக நிறைவேற்ற இந்த சட்ட முன்வடிவு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவானது, பேரவையில் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு
திமுக மனமுவந்து ஆதரவு தெரிவிக்கிறது என்று எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின்
கூறியுள்ளார்.
முன்னதாக காங்கேயம் காளை ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவனோபதி,
ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, வீர
விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ராஜேஷ், மற்றும் அம்பலத்தரசு ஆகியோர்
சட்டசபை கூட்ட தொடரில் சிறப்பு அழைப்பாளர்களாக இன்று பங்கேற்றனர்.
பின்னர்,
செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சட்டசபையில் ஜல்லிக்கட்டு சட்டம்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி தமிழகத்தில் போராடிய
மாணவர்கள், இளைஞர்களுக்கு சொந்தமானது. நாம் முழு வெற்றி பெற்றுள்ளோம்
என்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் வந்தபோது நிரந்தர சட்டம்
வேண்டும் என்றனர், இப்போது அதுவும் கிடைத்துவிட்டது எனவே மாணவர்கள்
போராட்டத்தை கைவிட்டு திரும்பலாம். இந்த வெற்றி மாணவர்கள், இளைஞர்கள்
மட்டுமே காரணம் என ஹிப்ஹாப் ஆதி தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து
தெரிவித்துள்ள ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், தமிழக சட்டசபையில்
நிறைவேறியுள்ளது சிறப்பான சட்டம். சட்டம் இயற்றப்பட போராடிய அனைவருக்கும்
நன்றி எனக் கூறினார்.
No comments:
Post a Comment