வாசகர்களின் திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை
தொடங்குகிறது. கண்காட்சியை கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி
வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவையொட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்
மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி சென்னையில்
நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 40வது புத்தக கண்காட்சி
இன்று தொடங்கியுள்ளது. வரும் 19ம் தேதி வரை பச்சையப்பன் கல்லூரி எதிரே
உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளியில் இந்த கண்காட்சி
நடக்கிறது.
தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள்
பங்கேற்றுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் இடம்
பெற்றுள்ளன. அவற்றில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப்
புத்தக பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. 10 லட்சம் புதிய தலைப்புகள் இந்தப்
புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்குள் நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர,
தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன்
டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. 50 ரூபாய் சீசன் டிக்கெட் பெறும்
வாசகர்கள் கண்காட்சி முடியும் வரை தினமும் வந்து செல்லலாம். 100 ரூபாய்
சீசன் டிக்கெட் பெறுவோர் 4 பேர் கொண்ட குழுவாக தினமும் வரலாம்.
இந்தக் கண்காட்சியை கல்வி அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் இன்று மாலை 6
மணிக்கு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக நூலகங்கள் இருப்பதாக
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment