பரம்பரை நகை, முறையான வருமானத்திற்கு உட்பட்டு வாங்கப்பட்ட நகைகளுக்கு
வரி கிடையாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தங்கம் வைத்துக்
கொள்வதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது என்ற தகவல்கள்
வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு மத்திய அரசு இன்று
விளக்கம் அளித்துள்ளது. அதாவது வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் தங்க
நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே
தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் தொடர்பான பழைய கட்டுப்பாட்டின்படி, திருமணமான பெண்களிடம்
அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், திருமணமாகாத பெண்கள் 250
கிராம் தங்கமும் வைத்துக் கொள்ளலாம். வருமான வரித்துறை சோதனையின்போது அவை
பறிமுதல் செய்யப்படமாட்டாது. ஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம்
வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. முறையான வருமானத்தின் கீழ்
எவ்வளவு நகை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் எனவும் விளக்கம்
அளித்துள்ளது.
அதேசமயம் கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கும் தங்கம் மற்றும் நகைகள்,
குடும்பத்தில் வழிவழியாக வந்த நகைகள் ஆகியவை ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளின்
படியோ அல்லது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்த விதிகளின்
படியோ வரி கிடையாது. அதே போல, பரம்பரை நகைகளுக்கு வரி விதிக்கப்படாது
என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு
60 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். இந்த அறிவிப்பு புதியது இல்லை எனவும்
மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment