அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான
ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள்,
அதிமுக தொண்டர்கள் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா,
சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன்
இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக
சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு மக்கள் வெள்ளத்தில்
சென்னை மெரினா கடற்கரை அருகே எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம்
செய்யப்பட்டது.
முன்னதாக 'மக்களால் நான்.. மக்களுக்காக நான்...' என முழங்கிய ஒரு
வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட
அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
வீதிகளிலும் சாலையோரத்திலும் ஜெயலலிதா போட்டோவுக்கு மாலை அணிவித்து
மரியாதை செய்தனர். சிறு குழந்தை, பெரியவர்கள், கட்சிப் பாகுபாடின்றி அஞ்சலி
செலுத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள்
"அம்மா.. அம்மா" என கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


No comments:
Post a Comment