Latest News

  

முஸ்லிம்களும் முத்தலாக்கும் ;


அல்லாஹ்வின் அளப்பெரும் மார்க்கமான இஸ்லாம் வழங்கியிருக்கும் வாழ்வியல் நெறிகளில் மிக முக்கியமான சிறப்பம்சத்தை பெற்றது இஸ்லாமிய திருமணமும் அது சார்ந்த திருமண முறிவு(நிகாஹ் ,தலாக்,குலா) சட்டங்களுமாகும்.

இது தான் உலகில் எந்த சட்ட வல்லுனர்களாலும் 

எந்த மதத்தாலும் வகுத்து தர முடியாத அளவுக்கு மிகமிக அறிவுப்பூர்வமான ஆணித்தரமான சட்டங்கள் ஆகும். அதனால் தானோ என்னவோ பன்னெடுங்காலமாக இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறி வைத்து தாக்கும் போதெல்லாம் அவர்களின் கெட்ட பார்வையில் இருந்து நிகாஹ் வும் தலாக்கும் தப்பிப்பதில்லை.

அந்த காழ்ப்புணர்வு களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்திய முஸ்லிம்களின் பரம எதிரிகளும் இந்தியாவில் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளின் காரணமாக பலமுறை தடை செய்யப்பட்ட இயக்கமுமான RSS ன் கைகளில் இந்திய ஆட்சி அகப்பட்டுக்கொண்டதால், 'தானாகவே ஆடும் பேய்க்கு சாம்பிராணியும்' போட்ட கதையாக தற்போது தனது RSSஅமைச்சர்களை விட்டே தலாக்குக்கு எதிராக 'மதத்தாக்குதல்'(அருண் ஜேட்லி) 'அறிவுக்கு பொருந்தாதது'(ரவி ஷங்கர் பிரசாத்) 'ஒழிக்கப்பட வேண்டியது'(வெங்கய்யா நாயுடு) என்றெல்லாம் கத்த வைத்துள்ளது.

(இந்த அமைச்சர்களெல்லாம் பதவியேற்கும் போது 'இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் இந்திய இறையாண்மையைக் காக்கும் விதத்திலும் நடந்து கொள்வோம்' என்று தாங்கள் வணங்கும் தெய்வங்களின் மீது சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது)
இதனடிப்படையில் பொது சிவில் சட்டம் என்ற பூச்சாண்டியை கையிலெடுத்து ஆளும் அதிகார வர்க்கமும், நீதி வர்க்கமும் ஊடக வர்க்கத்துடன் கை கோர்த்து கொண்டு முஸ்லிம் சமுதாயத்தின் அமைதியையும் நிம்மதியையும் சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்காட்டி வருகின்றன.

இவர்கள் எத்தனை வகை ஆயுதங்களை இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பிரயோகித்தாலும் அத்தனையையும் தடுத்து இஸ்லாத்தை பாதுகாப்பது இங்குள்ள முஸ்லிம்களின் பொறுப்பல்ல ,மாறாக இஸ்லாமிய சட்டங்களை வகுத்த இறைவனின் பொறுப்பு என்பது இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் எதிரிகளால் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் இஸ்லாமிய திருமணம் மற்றும் தலாக் பற்றியும் அதன் விவரங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

திருமணம் செய்ய விரும்பும் ஒரு ஆணோ, பெண்ணோ இஸ்லாமிய வரையறைக்குட்பட்டு தனக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமையை இஸ்லாமிய இறைச்சட்டம் வழங்கியுள்ளது.இதற்க்காக எந்த நீதி மன்றத்திலோ, காஜியிடமோ , அரசு அதிகாரியிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
இதே போல திருமண வாழ்க்கை ஒத்து வரவில்லைஎன்றால் இருவரும் மனமொத்து பிரிந்து விடும் உரிமையையும் இருபாலருக்கும் சமமாக (தலாக் ,குலா) இறைச்சட்டம் வழங்கியுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையான பாதுகாப்புச் சட்டங்களையும் இறைச்சட்டம் வகுத்து கொடுத்துள்ளது..

இங்குதான் இந்திய சட்டம் இறைச்சட்டத்துடன் முரண்படுகிறது. அதாவது தனக்கு பொருத்தமான துணையை அமைத்துக்கொள்வதில் முழு உரிமையை வழங்கும் இந்திய சட்டம்,தம்பதிகள்பிரியும் போது மட்டும் மூக்கை நுழைத்து,'தன் அனுமதியின்றி பிரியக்கூடாது' என சட்டம் பேசுகிறது.இதனால் மனமொத்து பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிய வேண்டிய தம்பதிகள் நீதிமன்ற அலைக்கழிப்பு, மானபங்க விசாரணைகள்,பரஸ்பர அவதூறு குற்றச்சாட்டுகள் என தங்கள் எதிர்காலமும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் அல்லோல கல்லோல பட்டுப்போவதற்கு இந்த சட்டம் காரணமாகி விடுகிறது.

அதே நேரத்தில் எவ்வித எதிர்கால பாதிப்பின்றி சுமுகமாகவும்,பரஸ்பர ஒப்பந்தங்களோடும் பிரிவதற்கு வழி வகுக்கும் தலாக் முறையை ஒருசில முஸ்லிம்கள் தவறாக புரிந்து பின் பற்றுவதால் சில விபரீதங்களுக்கு வழி வகுக்கின்றது ,அதுவே எதிரிகளின் வாய்க்கு அவலாகவும் அமைந்து விடுகிறது. 

எனவே இத்தகைய சூழ்நிலையில் சமுதாய அக்கறை கொண்ட உலமாக்கள் ,ஜமாஅத் நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் தலாக் உடைய சட்டங்களை தாங்களும் முழுமையாக தெரிந்து அதனை இஸ்லாமிய இளைஞர்களுக்கும் புரிய வைத்து இறை வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி விபரீதங்கள் நிகழ்வதையும் தடுக்க வேண்டும். எதிரிகளின் வாயையும் அடைக்க வேண்டும்.
தலாக்குல் ஹசன் (அழகிய தலாக் முறை )
 
தம்பதிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு அழகிய உபதேசம்,படுக்கை பிரிவு,இரு குடும்பத்தார் கவுன்சிலிங் போன்ற இறைவன் சொன்ன எந்த தீர்வும் பயன்தராத நிலையில் கடைசி வாய்ப்பாகத்தான் தலாக்கை பயன்படுத்த வேண்டும். அதுவும் மனைவியின் மாத விடாய் காலம் முடிந்து சுத்தமாகி இருவரும் வீடுகூடாத நிலையில் நிதானமாக யோசித்து ஒரு தலாக் சொல்ல வேண்டும். இதுவே 'தலாக்குல் ஹசன்' ஆகும்.

இதற்குப்பிறகு மனைவியின் இத்தா (காத்திருப்பு) காலமான மூன்று மாதவிடாய் காலத்திற்குள் இருவரும் மனம் மாறி சேர்ந்து வாழ விரும்பினால் அப்படியே எந்த நிபந்தனையுமின்றி சேர்ந்து வாழலாம்.

மூன்று மாதவிடாய் காலம் தாண்டி விட்டால் பிறகு இருவரும் முழுமையாக கணவன் மனைவி என்ற பந்தத்தை அறுத்துக்கொண்ட அந்நிய ஆண்- அந்நிய பெண் என்ற நிலைக்கு வந்து விடுவர்.(இதற்குப்பிறகு இரண்டாவது மூன்றாவது தலாக் தேவையில்லை).

இந்நிலையில் அவரவர் புதிதாய் தனக்கு பிடித்தமான வேறொரு துணையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.அல்லது இருவரும் மனமொத்து மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் மறு திருமணம் செய்து புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம். 

இது போன்ற நடைமுறைக்கு ஒரு மனைவியுடன் இரண்டு முறை வாய்ப்புள்ளது.மூன்றாவது முறையும் இப்படி நிகழ்ந்தால் அதன் பின் நிரந்தரமாக பிரிய வேண்டி வரும்.இந்நிலையில் தான் பாரதூரமான விபரீதமான சட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

தலாக்குல் பித்அத் அல்லது தலாக்குல் ஹராம் ;
 
மேற்சொல்லப்பட்ட அல்லாஹ் கற்று தந்த அல்லாஹ்வின் ரசூல் அங்கீகரித்த எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று சொல்வது தான் அறிவுகெட்ட- ஹராமான தலாக் ஆகும். இந்த தலாக் முறையைத்தான் "நான் உயிரோடு இருக்கும்போதே அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாட ஆரம்பித்து விட்டீர்களா?" என்று நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள்.

"நிதானத்தை கையாள வேண்டிய விஷயத்தில் ஷைத்தானுடைய தூண்டுதலினால் அவசரப்படுகிறீர்களா?" என்று உமர் (ரழி)எச்சரித்தார்கள். இந்த அவசர தலாக் முறையைத்தான் நம்மவர்கள் முத்தலாக் என்றோ மூன்று தலாக் என்றோ சொல்கிறோம்.இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஹராமான முறையாகும்.

ஆனால் மார்க்கம் தெரியாத சில இளைஞர்களும் சில ஜமாஅத் நிர்வாகிகளும் 'தலாக் என்றாலே இந்த ஹராமான முத்தலாக் முறைதான்' என்று முரணாக விளங்கி இதனை நடைமுறை படுத்துவதால்தான் வீணான விபரீதங்களையும் விமர்சங்களையும் முஸ்லிம் சமுதாயம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.(இதனால் தேவையற்ற சட்ட சர்ச்சைகளும் ஏற்படுகின்றன.ஏனென்றால் இதனால் ஒரே நேரத்தில் மூன்று தலாக்குமே நிகழ்ந்து விடும் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்)
எனவே சமுதாய அக்கறை கொண்ட உலமாக்கள், ஜமாஅத் நிர்வாகிகள்,தலைவர்கள் எல்லோருமே ஒன்று சேர்ந்து இந்த ஹராமான முத்தலாக் முறைக்கு எதிராக பாடுபட வேண்டும். இதனுடைய விபரீதங்களையும் தீய விளைவுகளையும் விளக்கிக்கூறி ஹராமான முத்தலாக் முறையைத் தடுத்து , இறைச்சட்டம் நமக்கு வகுத்து தந்த தலாக்குல் ஹசன் என்ற அழகிய தலாக் முறையைப் பின்பற்ற முன்வர வேண்டும். மௌலானா சம்சுதீன் காஸிமி,தலைமை இமாம், மக்கா மஸ்ஜித். பொது செயலாளர், ஷரீயத் கவுன்சில்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.