மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகளில்
ஒருவர். அரசியல் தலைவர் மட்டுமல்ல! அவர் ஒரு அறிவுஜீவி. மௌலானா அபுல் கலாம்
ஆஸாத் (ரஹ்) இந்திய ஒற்றுமையின் அடையாளம், மதசார்பற்ற தன்மைக்கும், இந்திய
சமய நல்லிணக்கத்துக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
சுதந்திரப் போராட்டத்தில் அவர் இழந்தது அதிகம்.சுதந்திரப் போராட்டதில் பங்கு பெற்று பலமுறை சிறை சென்றவர். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடங்கள் சிறையில் இருந்த காலங்களில் தனது மனைவி மற்றும் சகோதரிகளை இழந்தவர், 1944 ஆம் ஆண்டு விடுதலையாகி யாரும் இல்லாத வீட்டைக் கண்டு என் மனைவியோ கல்லறையில் வீடோ வெறிச்சோடிக் கிடக்கிறது என்று துயருற்றார்.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியாவின் நெருக்கடியான நேரங்களில் காந்தியுடனும் நேருவுடனும் துணை நின்றார். அவர்கள் இருவரும் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்களை தங்களுடன் தக்க வைத்துக்கொண்டார்கள்.
முதல் கல்வி அமைச்சராக பதவியேற்று இந்தியாவின் எதிர்காலத்திற்கு வித்திட்டவர். இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு புத்தகத்தில்: - “இந்திய யூனியனில் தங்கி விட்ட நன்கு அறியப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர் அபுல் கலாம் ஆஸாத். ஒன்றுபட்ட இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்களும் அமைதியாகவும் கௌரவத்துடனும் வாழமுடியும் என நம்பினார். நேருவின் வார்த்தைகளில் ஆஸாத் பற்றிக் கூறினால் “இந்தியாவில் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த ஒருங்கிணைந்த கலாசாரத்தின் தனிச் சிறப்புடைய விநோதமான பிரதிநிதி.” இந்தியாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஓடிவந்த பல்வேறு கலாசார ஆறுகள் சங்கமித்த இந்திய வாழ்க்கை கடலை அவர் பிரதிபலித்தார்.
ஆசாத் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவருடைய வாழ்க்கை லட்சியம் தோற்றுவிட்டதை கண்டு அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொண்டார். (ஆரம்பம் முதலே மக்கள் தலைவராக இருப்பதை விட அவர் ஒர் அறிஞராகவே இருந்து விட்டார்)
மத்திய மந்திரி சபையில் கல்வி அமைச்சராக பணி புரிந்தார். அவர் அந்த பொறுப்பில் இருந்த போது இந்திய இலக்கியம் நடனம் இசை கலை முதலியவற்றை வளர்ப்பதெற்கென புதிய கல்வித் துறைகளை உருவாக்கினார்” என்கிறார் வரலாற்றாசிரியர் ரமச்சந்திர குஹா.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவர்தான் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக நம்பப்படுகிற ஐ.ஐ.டி மற்றும் மருத்துவக் கல்லூரிகள், ஆயிரக்கணக்கான பள்ளிகள் , கல்லூரிகள் என்று ஏற்படுத்தியவர். நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு யு.ஜி.சி. யையும் மேலும் நவீன ஓவியக் கூடங்கள், சாகித்ய அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி, சங்கீத அகாடமி ஆகியவைகளை உருவாக்கினார். நூற்றுகணக்கான நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் ஏற்படுத்தியதும் அவர்தான்! இந்தியாவின் அறிவுத் தரத்தை மேம்படுத்தி கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) குறித்து இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கல்வி வளர்ச்சிக்கு அவர் செய்தவைகள் குறித்து பாடங்கள், குறிப்புகள் இந்தியக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதே இல்லை! நவீன இந்தியாவை வடிவமைத்தவரை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை கொண்டாடிய அறிவு ஜீவியை இந்திய அரசும், மக்களும் கண்டும் காணாமல் இருப்பது இந்தியப் பண்பாட்டுக்கு அழகல்ல!
இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகமும் அவர் குறித்த எந்தவிதமான உணர்வுமில்லாமல் இருக்கிறது. இந்தியா இரண்டாகப் பிரிக்கப்படுவது இந்திய முஸ்லிம்களுக்கு உடனடியாகவும், நீண்டகால நோக்கிலும் பாதகமான தாக்கத்தையே தோற்றுவிக்கும் என அஞ்சியவர்.
இந்தியாவில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய விழுமியங்களை தக்கவைத்துக்கொண்டு “உம்மத்தாக” வாழும் நுணுக்கங்களை அறிந்தவர். அதை இந்திய சமூகத்துக்கும் உணர்த்தியவர். அதன் அடையாளமாக வாழ்ந்தும் காட்டினார். அவர் குறித்து அறிவதும் ஆய்வு செய்வதும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும்.
மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) சிந்தனையாளர், வரலாற்று ஆய்வாளர் என்பதையும் தாண்டி உலகக் கல்வி என்றும் மார்க்கக் கல்வி என்றும் பிரித்து நோக்காமல் நவீன உலகுக்கு இஸ்லாமிய ஷரீஅத்தை நிகழ்கால சிந்தனைகளோடு முன்வைத்த இஸ்லாமிய ஷரீஅத்தின் துறை சார்ந்த அறிஞர், திருக்குர்ஆனின் விளக்கவுரையாளர் (தப்ஸீர் ஆசிரியர்), அவர் எழுதிய சூரா அல்ஃபாத்திஹாவுக்கான விளக்கவுரை தமிழிலும் வெளிவந்துள்ளது.
அவருடைய குடும்பம் தொடர்ச்சியான கல்விப் பாரம்பர்யம் கொண்டது. “என் தந்தையின் தாய்வழி தாத்தா மௌலானா முனவ்வருத்தீன் ‘ருக்னுல் முதாரிஸின்’களில் ஒருவராக இருந்தார். (ருக்னுல் முதாரிஸின்’ என்பது கல்வித்துறை இயக்குநர் பதவி போன்றது, படிப்பவர்களை ஊக்குவிப்பது, கல்வி உதவித்தொகை வழங்குவது, கல்வியாளர்கள் – ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது போன்ற பணிகளை உள்ளடக்கியது.)
மேலும் எனது தந்தை தனது 25 ஆம் வயதில் மக்கா சென்று அங்கேயே தங்கி திருமணமும் செய்து கொண்டார். எனது தாயின் தந்தை முஹம்மது ஜாஹிர் வத்ரி மதீனாவில் மிகப் பெரும் கல்வியாளர். எனது தந்தையும் அரபி மொழி புத்தகமொன்றை எகிப்தில் பதிப்பித்து வெளிட்டுள்ளார் என்று அவரே கூறுகிறார்.
தனது படிப்பு குறித்து பேசும்போது, இந்தியாவில் உள்ள முஸ்லிம் சிறுவர்களுக்கான பழைய கல்வி முறையில்தான் நான் படித்தேன். முதலில் பாரசீக மொழியையும் பின்பு அரபியையும் கற்றுத் தருவார்கள். மொழிகளில் புலமை அடைந்த பின்பு தத்துவம், ஜியோ மெட்ரிக், கணிதம் ஆகியவை அரபி மொழியில் கற்றுத் தரப்படும். மேலே கண்ட படிப்புகளைப் பெறுவதற்கு இஸ்லாமியத் தத்துவங்களில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்கிறார்.
நவீன அறிவியல், தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினால்தான் நிகழ்காலத்தின் உண்மை புரியும் என்பதை உணர்ந்து நவீனகால வரலாறு, தத்துவங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகுதான் சுதந்திர சிந்தனையாளன் என்ற பொருள் கொண்ட “ஆஸாத்” எனும் புனைப் பெயரை எனக்கு அமைத்துக் கொண்டேன் என்கிறார் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்கள். (நூல் : இந்தியா விடுதலை பெறுகிறது, சமூக நீதி அறக்கட்டளையின் வெளியீடு)
நவீன காலத்தை எதிர் கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் அதன் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கும் இன்றைய முஸ்லிம் சமூகம் தனது பாரம்பர்ய கல்வி முறைகளை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இந்திய அரசும் மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் தங்களது தலைமுறைகளுக்கு மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களை அறிமுகம் செய்வதில் பாராமுகமாக இருந்து வருவது வேதனைக்குரிய ஒன்று.
அவர் இஸ்லாமிய ஷரீஅத்தை கற்றுணர்ந்த அதே நேரத்தில் நவீன கால யதார்த்தை விளங்கி இருந்தார். அதனால்தால் அவர் யாராலும் புறக்கணிக்க முடியாத ஆளுமையாக விளங்கினார் என்பதை இந்தியச் சமூகமும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்றைய கல்வி முறையில் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) போன்ற அறிவாளுமைகள் உருவாவது இயலாத ஒன்று.
அற ஒழுக்கத்தைப் போதித்து அதன் அடித்தளத்தில் நிகழ்கால உண்மைகளை உள்வாங்கிய கல்வித் திட்டத்தால் மட்டுமே சமூக நலன் குறித்து சிந்திக்கும் அறிவு ஜீவிகளை உருவாக்க இயலும். இல்லாத போது வெறுமனே படித்தவர்கள் வருவார்கள், சமூக மேம்பாடு என்பது பண வளர்ச்சியே என வாதிடுவார்கள். அவர்களால் சமூகம் ஒருபோதும் பயன்பெறமுடியாது. பணமுள்ளவர்களே பயன் பெறுவார்கள்.
முஸ்லிம் சமூகம் தனது கல்விப் பாதையை மாற்றி இஸ்லாமிய அடிப்படை அறிவை போதிப்பதோடு தற்கால உலகை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற பாடத்திட்டங்களை வடிவமைத்தால்தான் நவீன உலகை எதிர்கொள்ளும் அறிவாளுமைகள் இந்திய - தமிழக முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவாகி வருவார்கள்.
அவர்கள்தான் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்களின் அடுத்த தலைமுறையாக வருவார்கள். இந்தியாவின் மக்கள் நல மேம்பாட்டுக்காக உழைப்பார்கள்.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment