Latest News

அதிகரிக்கிறது தேவை.. டெபிட், கிரெடிட் கார்டு ‘ஸ்வைப் மெஷின்’ வாங்குவது எப்படி தெரியுமா?

 
மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் முதல்கட்ட நடவடிக்கையாக 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய உணவுத் துறையின் கீழ் வரும் இந்திய உணவுக் கழகம், மத்திய உணவு தானிய சேமிப்பு நிறுவனம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே அவற்றின் பரிவர்த்தனைகளில் 99 சதவீதம் அளவுக்கு ரொக்கமில்லாத பரிவர்த்தனையே மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணப்புழக்கம் தட்டுப்பாடு காரணமாக 'கிரெடிட்', 'டெபிட்' கார்டு மூலம் வியாபாரம் மும்முரம் அடைந்து வருவதால், வியாபாரிகள் 'ஸ்வைப் மெஷின்' பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என்பது குறித்து இந்தியன் வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.


ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு: மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. இதனால் ஓட்டல்கள், பெரிய வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் ‘ஸ்வைப் மெஷின்' மூலம் ‘கிரெடிட்', ‘டெபிட்' கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பணப்புழக்க தட்டுப்பாடு காரணமாக விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக பெரிய வணிக நிறுவனங்கள் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளையும் கையாண்டு வருகின்றன. எனவே, காய்கறி-மளிகை கடை, பெட்டி கடை வைத்திருக்கும் சிறு குரு வியாபாரிகள் பார்வையும் தற்போது ‘ஸ்வைப் மெஷின்' பக்கம் திரும்பி உள்ளது. வங்கிகளில் ஸ்வைப் மெஷின் பெறுவதற்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. நாடு முழுவதும் ஸ்வைப் மெஷினுக்கு ‘திடீர்' மவுசு அதிகரித்துள்ளது. ஸ்வைப் மெஷின் பெறும் நடைமுறை விளக்கம்: இந்தியன் வங்கியின் பார்க் டவுன் உதவி பொதுமேலாளர் எம்.வி.ரமணா ‘ஸ்வைப் மெஷின்' பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: டயல் அப் (தொலைபேசி இணைப்பு மூலம்), டெஸ்க்டாப் (ஜி.பி.ஆர்.எஸ்.), ஹாண்டு ஹெல்டு (ஜி.பி.ஆர்.எஸ்.), டிஜிட்டல் (ஜி.பி.ஆர்.எஸ்) ஆகிய 4 வகை மாடல்களில் ஸ்வைப் மெஷின்கள் உள்ளன. இதில் ‘டயல் அப்', ‘டெஸ்க்டாப்', ‘ஹாண்டு ஹெல்டு' ஆகிய மெஷின்களில் பண பரிமாற்றம் குறித்த ரசீது வரும். ‘டிஜிட்டல்' மெஷினில் ரசீது வராது. அதற்கு பதிலாக பண பரிவர்த்தனை விவரம் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். ஆக (குறுந்தகவல்) வந்து சேரும். ‘டெஸ்க்டாப்', ‘டயல் அப்' மெஷின்கள் மின்சாரம் மூலம் இயங்குகிறது. மற்றவைகள் பேட்டரி மூலம் இயங்குகிறது.

சுவைப் மெஷின் பெற எப்படி விண்ணப்பிப்பது? ஸ்வைப் மெஷின் கோரி விண்ணப்பிக்கும் வியாபாரிக்கு, எந்த வங்கியில் விண்ணப்பிக்கிறாரோ? அந்த வங்கியில் கண்டிப்பாக அவருக்கு கணக்கு இருக்க வேண்டும். பின்னர் வங்கியில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தில் தொழில் விவரம், வியாபாரியின் பெயர், புகைப்படம், வீடு-கடை முகவரி, தொலைபேசி, செல்போன் எண் மற்றும் கடந்த 3 ஆண்டுகள் கடையின் விற்பனை, லாப-நஷ்டம் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். கடை சொந்தமானதா? வாடகையா? குத்தகையா? என்பன போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

திரும்பப் பெறுதல்: கூட்டாண்மை வணிக நிறுவனமாக இருப்பின் யாராவது ஒருவருடைய புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். ஆனால் மற்றவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களையும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். விற்பனையை பொறுத்து எத்தனை ஸ்வைப் மெஷின்கள் வேண்டும் என்றாலும் அவர்கள் பெறலாம். அதே நேரம் போதிய அளவு விற்பனை இல்லாத கடைகளில் ஸ்வைப் மெஷின்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வணிகர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்ப படிவம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கிருந்து ஸ்வைப் மெஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 20 நாட்களில் இருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் ஸ்வைப் மெஷின்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஸ்வைப் மெஷின் பெற கட்டணமில்லை: சுவை மெஷின் பெறுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ‘சிம்கார்டு' இணைப்புக்கு மட்டும் 400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மாத வாடகை கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்று அவர் கூறினார். எத்தனை முறை பயன்படுத்தினாலும் ஸ்வைப் மெஷின் பயன்படுத்துவோருக்கு வரி எதுவும் கிடையாது. வியாபாரிகளுக்கு விற்பனைக்கு ஏற்ப சேவை வரி மட்டும் வசூலிக்கப்படும். அனைத்து வங்கி கார்டுகளையும் எந்த வங்கியின் ஸ்வைப் மெஷினிலும் பயன்படுத்தலாம்.

ஸ்வைப் மெஷின் சிறப்பு முகாம்: ஸ்வைப் மெஷின் பொறுத்தவரையில் அனைவருக்கும் ‘ஸ்வைப் மெஷின்' கிடைக்கும். ஆனால் விற்பனை அதிகம் நடைபெறும் கடைகளுக்கு முதலில் வழங்குவதற்கு முன்னூரிமை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். தற்போதுள்ள நிலையில் சுவைப் மெஷின் தேவை அதிகரித்துள்ளதால், இந்தியன் வங்கியில் ஸ்வைப் மெஷின் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த 21-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2017) மார்ச் 31-ந் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடக்கிறது. முகாமில் ஸ்வைப் மெஷினுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு மாத வாடகை கட்டணம் உள்பட எந்த வித மறைமுக கட்டணமும் கிடையாது. வருகிற 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய வாடகை திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.