Latest News

தாடியில் கூட விஷம் தடவினர்.. அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோ

 
ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம் போட்டு காட்டும். அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளை சுவைப்பதற்காகவும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர் அமெரிக்க கணவான்கள். தங்கள் நாடு, அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கா தனது கையாட்களை கியூபாவின் அதிபர்களாக நியமித்து, கால்பந்தாக உருட்டி விளையாடியது.

ஊழல், அடக்குமுறை கிடைத்த வரை லாபம் என வந்த அதிபர்களும் கொள்ளையடித்து குதுகலித்தனர். இப்படித்தான், 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் என கூறப்படும் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார். பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. மறுபக்கமோ தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வறுமையில் உழண்டனர்.


தாய்நாடே முக்கியம் கொதித்தெழுந்த காஸ்ட்ரோ, மாணவர் பருவத்தினராக இருந்தபோதிலும், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த சிறுபடையோடு சென்றார். உயிர் போனால் போகட்டும், தாய் நாட்டு மக்களின் மானமே பெரிது என முழங்கியபடி, காஸ்ட்ரோ படை முன்னேறியது. ஆனால், அமெரிக்க அதிநவீன ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த கியூபா ராணுவம் இத்தாக்குதலை எளிதில் முறியடித்தது.

வரலாறு என்னை விடுதலை செய்யும் காஸ்ட்ரோவை ராணுவத்தினர் கைது செய்தனர். அப்போது, நீதிமன்றத்தில் பிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பெயரில் வெளிவந்தது. 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு கொரில்லா படை தாக்குதல் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் அரசுக்கு முடிவுகட்டி கியூப மக்களுக்கு சுய மரியாதையுடன் கூடிய அரசை பரிசளித்தார் காஸ்ட்ரோ.

அமெரிக்காவின் வெறி பிடல் காஸ்ட்ரோவின் எழுச்சியை, அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சில் விழுந்த நெருஞ்சி முள்ளாய் குத்தியது அமெரிக்கர்களுக்கு. குருந்தாடியுடன், சுருட்டு புகைக்கும் காஸ்ட்ரோ முகம், உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த குத்தகைதாரர்களான அமெரிக்கர்களின் தூக்கத்தை கெடுத்தபடியே இருந்தது. அவரை கொன்று ஒழித்து தங்கள் ரத்த வெறியை தீர்க்க வேண்டும் என துடித்தனர், துவண்டனர்.

குட்டி தீவின் தலைவர் 1960க்கு பிறகு பதவியேற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களும், இக்கொலை முயற்சியை தங்களது அரசியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தனர். பொருளாதார வசதியோ, உலகளாவிய அரசியல் அதிகாரமோ இல்லாத ஒரு சிறிய தீவின் தலைவரை கொல்ல வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து முயன்றது என்பது அதிர்ச்சி தகவல். ஆனால் அதுதான் உண்மை. ஆனால் தன்னை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ. இன்று அவரை இயற்கைதான் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளதே தவிர, அமெரிக்காவால் அவரின் தாடி முடியை கூட சீண்ட முடியவில்லை.

கொலை முயற்சி அமெரிக்கா இதுவரையில் 638 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றில் விஷம் கலந்து காஸ்ட்ரோவை கொலை செய்ய முயன்றுள்ளது அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால் காஸ்ட்ரோவின் தாடியில் ரசாயனத்தை கலந்து உடலுக்குள் செலுத்தும் முயற்சியும் நடந்தன. பீரங்கிகளை எதிர்த்து புரட்சி செய்த காஸ்ட்ரோவுக்கு, இந்த கோழைத்தன தாக்குதல்களை முறியடிப்பதில் பெரும் சிரமம் இருக்கவில்லை. இதோ இன்று, அமெரிக்க அதிபர்களுக்கும், அதன் உளவு அமைப்புகளும் முகத்தில் கரியை பூசி, அந்த புரட்சி நாயகனுக்கு இயற்கை ஓய்வை கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.