நீதித்துறையில் குறிப்பாக உயர் நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டிஎஸ்.தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது
தற்போது 500 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், மேலும் 500
காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 121 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்
பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து
காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்
கேட்டுக் கொண்டார்.
ராணுவ மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் போட்டித் தேர்வாணையம்
ஆகியவற்றின் தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் குறை கூறினார்.
நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணியில் உள்ள நீதிபதிகளுக்கு
அதிகளவில் பணிகளை ஒதுக்கி அவர்களை கஷ்டப்படுத்தும் நிலைக்கு தாம்
தள்ளப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
தற்போதுள்ள விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவராத நிலையில் இப்பிரச்னைக்கு
தீர்வு காண இயலாது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு ஏற்கனவே தாம் கடிதம்
எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீர்ப்பாயங்களில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கலாம் அவர்கள்
அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் தான் என தாம் கூறியிருப்பதாகவும் அவர்
சொன்னார். அந்த தீர்ப்பாயங்களுக்கு தலைமை வகிக்கும் சூழ்நிலையில் உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் இல்லை என்றும் தாக்கூர் தெரிவித்தார்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் குற்றச்சாட்டுக்கு
மறுப்புத் தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடப்பு
ஆண்டில் மட்டும் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment