ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் புது 2000 ரூபாய்
விநியோகம் செய்யபட்டு வருகிறது என ஆர்.பி.ஐ. மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா
தெரிவித்து உள்ளார்.
சென்னை ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் வாங்க கூட்டம்
அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு குறித்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வு
செய்து வருகின்றனர். காவல்துறை ஆணையர் சேஷாயி, ஸ்ரீதர் தலைமையில்
அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500,
1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என
பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை
குறைக்க வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்களில் புதிய 500, 2000 ரூபாய்
நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசையில் மக்கள்
புதன்கிழமை வங்கி விடுமுறை விட்டு வியாழக்கிழமை வங்கி திறக்கபட்டு
இருந்தது. தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய
ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காக, நாடு முழுவதும் வங்கிகள் முன்பு
வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் சென்றனர்.
குவிந்த மக்கள்
வியாழக்கிழமை காலை 8 மணி முதலே ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள்
முன் மக்கள் குவிந்தனர். நாட்டின் தலைநகரங்கள் உட்பட பல்வேறு நகரங்கள்
மற்றும் வங்கிக்கிளைகள் உள்ள இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள
சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வங்கிகள் முன்பு வரிசையில் மக்கள்
கூட்டம் கூட்டமாக அணிவகுத்து நின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும்
போடப்பட்டிருந்தது.
போலீஸ் பாதுகாப்பு
சென்னை ரிசர்வ் வங்கியில் பொதுமக்கள் வரிசையில் செல்வதற்காக பேரிகார்ட்
அமைக்கப்பட்டிருந்தது. சென்னை ரிசர்வ் வங்கியில் துணை ஆணையர் தலைமையில்
கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எட்டு சிறப்பு கவுண்டர்கள் வாயிலாக நோட்டுகளை மாற்றிக்கொள்ள கூடுதல்
வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்.பி.ஐ மண்டல இயக்குநர்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.ஐ. மண்டல இயக்குனர்
சதக்கத்துல்லா, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ள அனைத்து
வங்கிகளுக்கும் புதிய நோட்டுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கி
ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் புது 2000 ரூபாய் விநியோகம் செய்யபட்டு
வருகிறது என கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வங்கி
ஏடிஎம்களில் எடுத்து கொள்ளலாம் என சென்னை ஆர்.பி.ஐ. மண்டல இயக்குனர்
சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார்.





No comments:
Post a Comment