சில்லறைத் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி
செய்யும் போது பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்
பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி
அறிவித்ததில் இருந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் சில்லறைத் தட்டுப்பாடு, பழைய நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்சனை
என நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக மக்கள் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி
உள்ளனர். மேலும், பணப்புழக்கமும் முடங்கி போயுள்ளது. பல்வேறு வகையிலும்
சிறு மற்றும் குறு வியாபாரங்கள் சரிந்துள்ள நிலையில், வீடுகளில் கேஸ்
சிலிண்டர் பிரச்னை பெரும் பிரச்சனையாகியுள்ளது.
வீடுகளில் காலியான சிலிண்டரை கொடுத்துவிட்டு, புதிய சிலிண்டரை பெற
கையில் பணம் இல்லாததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர். வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்ட நிலையில், பழைய சிலிண்டரை
எடுத்துக் கொண்டு புது சிலிண்டரை போட வருவோரிடம் 2000 ரூபாய் நோட்டைக்
கொடுத்தால் சில்லறை இல்லை என்று வாங்க மறுக்கின்றனர். வீட்டில் உள்ள
பெண்களிடம் சில்லறை நோட்டுகளும் இல்லை. இதனால் வீட்டில் சமைக்க முடியாமல்,
குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், ஒரு சில கேஸ் ஏஜென்சிகள் பழைய 500 ரூபாயை வாங்கிக் கொண்டு சிலிண்டரை
டெலிவரி செய்துவிட்டும் செல்கின்றனர். என்றாலும் பல ஏஜென்சிகள் இதனை
செய்வதில்லை.
எனவே, கேஸ் ஏஜென்சிகள் பழைய நோட்டை வாங்க வேண்டும் என்றும் அல்லது டெபிட்
கார்டு, கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்த வழி வகை செய்ய வேண்டும்
என்றும் வாடிக்கையாளர்கள் கோரியுள்ளனர். மேலும், இதற்கான நடவடிக்கைகளை
பெட்ரோலிய நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.


No comments:
Post a Comment