முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும், அவரது உடல்நலத்தில் என்ன
பிரச்சினை என்பது குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது
பற்றியும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹெச். வி. ஹண்டே
நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதகாலமாக உடல் குறைவால் அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தைக்
காண லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த 10 நாட்களாக அறிக்கை எதுவும் வெளியிடாத அப்பல்லோ மருத்துவமனை நேற்று
இரவு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை
அளித்து வருகிறார்கள். ஊட்டச் சத்து துறையினர் வழங்கும் ஆலோசனையின்படி
முதல்வர் உணவு எடுத்து கொள்கிறார். முதல்வரின் உடல்நிலை சீராக முன்னேறி
வருகிறது. அவர் டாக்டர்களுடன் பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
ஊடகங்களில் இந்த தகவல் வெளியானதில் இருந்தே அதிமுக தொண்டர்கள்
உற்சாகமடைந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும், அவரது உடல்நலத்தில் என்ன
பிரச்சினை என்பது குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது
பற்றியும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை
அமைச்சராக 10 ஆண்டுகாலம் பணியாற்றிய டாக்டர் ஹெச்.வி. ஹண்டே, நமது ஒன்
இந்தியா தமிழ் இணையத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும்
அவர் குணமடைந்து வருவது குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
முதல்வர் உடல்நலம் எப்படி இருக்கிறது?
முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்துள்ளதாக
மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது நுரையீரலில் சளி அதிகமாக
சேர்ந்திருந்தது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக
சிங்கப்பூரின் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண்
மருத்துவ நிபுணர்கள் வந்துள்ளனர். இருவரும் முதல்வருக்கு நல்லமுறையில்
சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நுரையீரலில் இருக்கும் சளியை ஆன்டி பயாட்டிக் மூலம் வெளியேற்றுவதற்கு
பதிலாக பிசியோதெரபி அளிக்கும்போது வேகமாக வெளியே வந்துவிடும். அதனால்
ஆன்டிபயாட்டிக்கின் தாக்குதல் இருக்காது. அத்துடன் நுரையீரலுக்கும் காற்று
நன்றாக போகும். முன்பு இருந்த பிரச்சினைகள் அவருக்கு குணமாகிவிட்டது.
எங்களுடைய மருத்துவமனையிலும் இதுபோன்ற சிகிச்சைகள் நோயாளிகளுக்கு
அளிக்கப்படுவதுண்டு.
மருத்துவர் என்ற முறையில் நீங்கள் முதல்வரை சந்தித்தீர்களா?
நான் முதல்வரை பார்க்கவில்லை. துணை சபாநாயகர் தம்பித்துரையிடமும்,
மருத்துவர்களிடமும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.
அவர்கள்தான் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம்
அளித்தனர். அவர்கள் கூறியது எனக்கு திருப்தியாக இருந்தது. ஒரு வாரத்தில்
முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று எனக்கு முழு நம்பிக்கை
இருக்கிறது.
முதல்வர் உடனடியாக பணிக்கு திரும்ப இயலுமா?
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து ஒரு வார காலத்திற்குள் வீடு
திரும்பினாலும், அவர் பணிக்கு திரும்புவது என்பது அவரது முடிவு. அவர்
எப்போது பணிக்கு, இயல்பு நிலைக்கு திரும்புவார் என்பதை என்னால் மட்டுமல்ல
யாராலும் கூற இயலாது.
எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அறிக்கைகள் கொடுத்தீர்களே?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984ம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த
போது இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் அறிக்கை அளிக்கவில்லை. அப்போது
நாவலர் நெடுஞ்செழியன். ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர்
அரசாங்கத்தை கவனித்துக்கொண்டனர். ஒரு மருத்துவர் என்ற முறையிலும்,
சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் நான் அறிக்கைகள் அளித்தேன்.
அப்பல்லோ அறிக்கைகள்
பாரதப் பிரதமர் வாஜ்பேயி அவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து
கொண்ட போது, அந்த மருத்துவமனையில் மூட்டு மாற்று மருத்துவர்தான் அறிக்கை
அளித்தார். இப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ
மருத்துவமனை அளிக்கும் அறிக்கையே போதுமானது.
பேட்டி தொடரும்
டாக்டர்
ஹெச்.வி ஹண்டே அவர்கள், நமக்கு எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த
போது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள், 1984ல் முதல்வர் எம்.ஜி.ஆர்
மருத்துவமனையில் இருந்த போதும், அமெரிக்க சென்ற போதும் நடந்த சம்பவங்கள்,
1988ம் ஆண்டு அதிமுகவில் நடந்த சம்பவங்கள், முதல்வர் ஜெயலலிதா மீண்டும்
பொதுச்செயலாளர் ஆனது பற்றியும் பல தகவல்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து அவற்றை தருகிறோம்.
No comments:
Post a Comment