முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக, தமிழக
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு
வருகை தந்து சுமார் 25 நிமிடங்கள் டாக்டர்களிடம் பேசிவிட்டு திரும்பினார்.
உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல்
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வதந்திகள்
உச்சநிலைக்கு சென்ற காலகட்டத்தில், அவற்றுக்கு முடிவு கட்டும்விதமாக
அக்டோபர் 1ம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதா உடல்
நலம் பற்றி விசாரித்து திரும்பினார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
பொறுப்பு ஆளுநர் வருகைக்கு பிறகுதான் வதந்திகள் பெருமளவுக்கு
குறைந்தன. அப்பல்லோ அறிக்கையிலும், மேலதிக தகவல்கள் வெளியாக தொடங்கின. இந்த
நிலையில், ஜெயலலிதா தற்போது பூரண நலமடைந்துவிட்டதாக அப்பல்லோ வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில்,
ஜெயலலிதா, சகஜமாக பேசுவதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் அப்பல்லோ
மருத்துவமனைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்குள்
சென்றார். அப்பல்லோவிற்குள் சென்ற பொறுப்பு ஆளுநர், டாக்டர்களிடம் ஜெயலலிதா
உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
கடந்த முறை மருத்துவமனை சென்றபோது ஜெயலலிதாவை சந்திக்க மருத்துவர்கள்
அனுமதித்ததாகவும், தான், சந்திக்கவில்லை எனவும் பொறுப்பு ஆளுநர் உள்துறை
அமைச்சகத்திற்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்
இன்று சுமார் 25 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த ஆளுநர் அதன்பிறகு
ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.
No comments:
Post a Comment