காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு தொடர்ந்து மத்திய அரசு
துரோகம் செய்து வருவதைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது விவசாயிகளின்
கேள்வி.
1991-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராக
இருந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. 1992-ம் ஆண்டு காவிரி நதிநீர்
பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது.
தூக்கி போட்ட வாழப்பாடி
மத்திய அரசின் துரோகத்தை சகித்துக் கொண்டு பதவிவெறியில் ஒட்டிக்
கொண்டிருக்காமல் அந்த அமைச்சர் பதவியை தூக்கிப் போட்டு 'மானத் தமிழர்' என
நிரூபித்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்பின்னர் அப்படியான மக்கள் நலன்
சார்ந்த உணர்வுடன் எவரும் காவிரி பிரச்சனைக்காக அமைச்சர் பதவியையோ எம்பி
பதவியையோ ராஜினாமா செய்யவில்லை.
தொடர்ந்து துரோகம்
தற்போது தமிழகத்துக்கு உச்சகட்ட துரோகத்தை மத்திய அரசு செய்து
கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதை மதிக்காமல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்து
கொண்டிருக்கிறது.
தூக்கி போடுவாரா?
ஜல்லிக்கட்டு விவகாரம், கெயில், மீத்தேன் விவகாரம், பாலாறு அணை, மீனவர்
பிரச்சனை, கேரளா அணை, காவிரி மேகதாது விவகாரம் என தொடர்ந்து மத்திய அரசு
துரோகம் செய்த போதும் பொன். ராதாகிருஷ்ணன் மவுனியாக மத்திய அமைச்சர்
பதவியில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இப்போதாவது தமிழர் நலன் சார்ந்து
மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வாழப்பாடி ராமமூர்த்தி போல
அமைச்சர் பதவியை பொன். ராதாகிருஷ்ணன் தூக்கி எறிந்துவிட்டு வரவேண்டும்
என்பதுதான் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.



No comments:
Post a Comment