ஆயுத பூஜை விழாவில் துப்பாக்கி, வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை
வைத்து வழிபாடு நடத்தியதாக புகார் எழுந்ததையெடுத்து இந்து மக்கள் கட்சித்
தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆயுத பூஜையின் போது தொழில் செய்யும் இயந்திரங்கள், புத்தகங்கள் இவற்றை
எல்லாம் வைத்து பூஜை செய்வது வழக்கம். ஆனால், ஆயுத பூஜையில் துப்பாக்கி,
கத்தி, அரிவாள், வாள் என மனிதர்களைக் கொல்லும் ஆயுதங்களை வைத்து கொண்டாடிய
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது போலீசில் புகார்
அளிக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது முகநூல் பக்கத்தில்,
ஆயுத பூஜை வழிபாடு இனிதே நிறைவுற்றதாக புகைப்படம் ஒன்றை
பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள்,
வாள் ஆகியவை பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆயுத பூஜை என்பது தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படக்கூடிய கருவிகளை
சுத்தம் செய்து வழிபாடு நடத்தும் ஒரு பண்டிகையாக இந்துக்களால்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் துப்பாக்கியை வைத்து அர்ஜூன் சம்பத்
வழிபாடு நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துப்பாக்கியை
வைத்துதான் அர்ஜுன் சம்பத் தொழில் செய்கிறாரா என்று பலர் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமாக ஆயுத பூஜையின் போது துப்பாக்கி,
கத்தி ஆகியவற்றை வைத்து பூஜை நடத்திய அர்ஜுன் சம்பத் மீது இந்திய தேசிய
முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தடா ரஹீம் போலீசில் புகார்
அளித்துள்ளார். இதையடுத்து முகநூல் பக்கத்தில் இருந்து அந்த படத்தை அர்ஜூன்
சம்பத் நீக்கிவிட்டார். இந்நிலையில் கோவை காவல் ஆணையரிடம் மாவட்ட அனைத்து
ஜமாத் அமைப்பினர் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அர்ஜூன் சம்பத்
மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment