தஞ்சாவூர் சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் கடந்த பொதுத் தேர்தலில்
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் அஞ்சுகம் பூபதி மீண்டும் சீட் கேட்டு
விருப்பமனு கொடுத்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில்
பெருமளவில் பணம் விளையாடியதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பிற
தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும்
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேடபாளர் சீனிவேல்
மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கும் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் வருகிற
நவம்பர் 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத் தேர்தல்
நடைபெறவுள்ளது. இந்த நான்கு தொகுதிகளில் திருப்பரங்குன்றத்தைத் தவிர மற்ற 3
தொகுதிகளுக்கும் அதிமுக பழைய வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது.
விருப்ப மனு
மறு முனையில் திமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேற்றுடன்
அதற்கான அவகாசம் முடிவடைந்தது. இன்று நேர்காணல் நடக்கிறது. இதில் தஞ்சை
தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பி அஞ்சுகம் பூபதி மனு
கொடுத்துள்ளார்.
இன்று நேர்காணல்
இன்று காலை 10 மணியளவில் கட்சியின் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர்
க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன்
ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர். பெரும்பாலும் பழைய வேட்பாளர்களே நிறுத்தப்படலாம் என்று
தெரிகிறது.
அஞ்சுகம் பூபதி
29 வயதான அஞ்சுகம் பூபதி, எம்பிபிஎஸ் டாக்டர் ஆவார். தஞ்சை புதிய
வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார்.
இவருடைய தந்தை மறைந்த பூபதி தஞ்சை நகர தி.மு.க. பொறுப்பாளராகவும், தஞ்சை
நகரசபை துணைத் தலைவராகவும் இருந்தார். தாயார் ரூபாவதி பூபதி. இவர்
கல்வித்துறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
திமுகவினர் உற்சாகம்
கடந்த தேர்தலில் இவருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும் தேர்தல்
நிறுத்தி வைக்கப்பட்டதால் திமுகவினர் பெரும் ஏமாறறமடைந்தனர். தற்போது
மீண்டும அஞ்சுகமே நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால்
திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.


No comments:
Post a Comment