தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை
வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம்
இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
பலமுறை உத்தரவிட்டும் அதை மதிக்கவில்லை கர்நாடகா. காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிரான மத்திய அரசின் மனுவை இன்று
உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட
கர்நாடகா ஒப்புதல் தெரிவித்தது.
இதையடுத்து அக்டோபர் 7 முதல் 18-ந் தேதி வரை எவ்வளவு நீரை கர்நாடகாவால்
திறந்துவிட முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித்
ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு
அக்டோபர் 7-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை
திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
மேலும் தமிழகம், கர்நாடகா அணைகளை மேற்பார்வைக் குழு பார்வையிட்டு வரும்
அக்டோபர் 17-ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:
Post a Comment