திண்டிவனம் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர்
பலியாகியுள்ளனர். தொழிற்சாலை கொழுந்துவிட்டு எரிவதால் உயிரிழப்பு இன்னும்
அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
திண்டிவனம் வானூர் அருகே துருவை என்ற கிராமம் உள்ளது. அங்கே ஒரு தனியார்
பட்டாசு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பதால்
பட்டாசு தொழிற்சாலையில் வேலைகள் வேகமாக நடந்து வந்திருக்கின்றன.
இந்நிலையில், திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து
போன தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த விபத்தில்
5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலைக்குள் 35 பேர் வேலை
செய்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 10 பேர் படுகாயம் அடைந்து
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு
செல்லப்பட்டுள்ளனர்.
பட்டாசு விபத்தையடுத்து இந்த ஆலையின் மேற்கூரை இடிந்து விழுந்து
தரைமட்டமாக ஆகியிருக்கிறது. இந்த ஆலையை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார்.
அவர் முறைப்படியான உரிமம் பெற்று இந்த ஆலையை நடத்தி வருகிறாரா இல்லையா
என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த
பட்டாசு ஆலை வயல் வெளியின் மையப் பகுதியில் இயங்கி வந்ததால் வெடி
விபத்தால் பொது மக்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. எனினும் துருவை
கிராமமே கரும்புகையால் சூழப்பட்டிருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment